திருச்சி முசிறியில் 18 சவரன் நகை கொள்ளை - Trichy Insight

திருச்சி முசிறியில் 18 சவரன் நகை கொள்ளை - Trichy Insight

திருச்சி மாவட்டம் முசிறியில், வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்தபோதே பீரோவை உடைத்து 18 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 27, 2026. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் இன்று அரங்கேறிய நகை கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முசிறி ஓம் சக்தி கோவில் அருகேயுள்ள தட்டார தெருவில் வசித்து வருபவர் சர்தார் (65). இவரது மகன் துபாயிலும், மருமகன் சவுதி அரேபியாவிலும் வேலை செய்து வருகின்றனர். இன்று சர்தார் வீட்டின் மேல் மாடிக்குச் சென்றிருந்த நிலையில், கீழே அவரது மனைவி ஷகிலா (50), மகள் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் சர்தார் மீண்டும் கீழே வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவும் திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த 18 சவரன் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருந்தபோதே இவ்வளவு துணிகரமாக நகை கொள்ளையடிக்கப்பட்டது முசிறி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக முசிறி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் டிஎஸ்பி முத்துக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லதுரை தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்களைப் பிடிக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், கைரேகை நிபுணர்களும் வந்து பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்து, மர்ம நபர்களின் தடயங்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம், அந்தத் தெருவில் வசிக்கும் மக்களிடையே பாதுகாப்புக் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக முசிறி போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது பொதுமக்களைக் கவலை அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக வீடுகளில் நடக்கும் கொள்ளைச் சம்பவங்களை முறியடிக்க, காவல்துறை தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. திருடர்களைக் கண்டுபிடித்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். துரிதமாக செயல்பட்டு மர்ம நபர்களை முசிறி போலீசார் கைது செய்வார்கள் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #MusiriNews #GoldTheft #CrimeAlert #TrichyCrime #PoliceInvestigation #TamilNaduNews #TrichyUpdates #PublicSafety #LocalNews #Musiri #Tiruchirappalli #SafeTrichy

Socials: Handles: @trichyinsight @trichyinsight