குளித்தலை பெண் கொலை: கரும்புக்காட்டில் கொடூரம் | Trichy Insight

குளித்தலை பெண் கொலை: கரும்புக்காட்டில் கொடூரம் | Trichy Insight

குளித்தலை அருகே தனியாக வசித்து வந்த பெண் கரும்புக்காட்டில் கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 12, 2026. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மேலப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி 40 வயதான சிவரஞ்சனி. சுரேஷ் திருச்சியில் உள்ள ஒரு பழக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் விகாஷ் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வேலையின் காரணமாக கணவனும் மகனும் 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் சிவரஞ்சனி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் சிவரஞ்சனியின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சிவரஞ்சனியை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர்கள் சிவரஞ்சனியை பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகிலிருந்த கரும்புக்காட்டில் அவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர். வீட்டின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை போலீசார் சிவரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிவரஞ்சனி அணிந்திருந்த தோடு மற்றும் செயின் போன்ற நகைகள் அப்படியே இருந்தன. மேலும் வீட்டிலும் எந்த பொருளும் திருட்டு போகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் இந்த கொலை ஆதாயத்திற்காக நடந்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் கருதுகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தனியாக இருந்த பெண் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Kulithalai #KarurNews #CrimeNews #TamilNews #MurderCase #PoliceInvestigation #KulithalaiNews #TamilnaduCrime #BreakingNews #TrichyLocal

Socials: @trichyinsight @trichynews