Lalgudi Gutka Seizure: 107 Kg Tobaco Seized in Trichy | Trichy Insight

Lalgudi Gutka Seizure: 107 Kg Tobaco Seized in Trichy | Trichy Insight

லால்குடி அருகே செங்கரையூரில் மளிகை கடையில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 107 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்.

மே 17, 2026 – திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் பதுக்கப்பட்டு, சில்லறை விலையில் பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று செங்கரையூர் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனையில் இறங்கினர்.

இந்த சோதனையின் போது, செங்கரையூர் கள்ளர் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் நிவாஸ் (41) என்பவருக்குச் சொந்தமான மளிகை கடையை போலீசார் சல்லடை போட்டு தேடினர். அப்போது கடையின் உரிமையாளர் நிவாஸ், போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து தடுமாறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், கடையின் உள்பகுதியில் இருந்த குடோன் மற்றும் ரகசிய அறைகளை சோதனையிட்டபோது, அங்கு வரிசையாக சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை போதை பொருட்கள் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது. இதன் மொத்த எடை சுமார் 107.750 கிலோ ஆகும். இதையடுத்து மளிகை கடை உரிமையாளர் நிவாஸை போலீசார் பிடித்து விசாரித்ததில், ஸ்ரீரங்கம் வட்டம் மேலூர் பட்டர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சுபாஷ் என்பவரது மகன் ராஜா (28) என்பவருடன் சேர்ந்து, திருச்சியின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய இதை பதுக்கியதை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவாஸ் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களிடமிருந்த 107 கிலோவிற்கும் அதிகமான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லால்குடி பகுதியில் மிக சாதுரியமாக செயல்பட்டு இந்த பெரும் போதைப்பொருள் பதுக்கலை கண்டுபிடித்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் குழுவினரை, திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சிருஷ்டி சிங் இ.கா.ப (சட்டம் மற்றும் ஒழுங்கு - தெற்கு) அவர்கள் நேரில் அழைத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Lalgudi #GutkaSeizure #TrichyPolice #SrishtiSinghIPS #Sengaraiyur #SrirangamNews #TobaccoBust #CrimeNewsTrichy #TamilNaduPolice #TrichyDistrict

Socials: Handles: @trichyinsight @trichynews