Manapparai Crusher Protest Youth Climbs Electric Pole | Trichy Insight

Manapparai Crusher Protest Youth Climbs Electric Pole | Trichy Insight

மணப்பாறை அருகே ரெட்ட மலையில் தனியார் கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 29 வயது இளைஞர் ஒருவர் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 7, 2026. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் ஒருவர் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போராட்டம், ஒட்டுமொத்த கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மணப்பாறையை அடுத்த ஆ.தோப்புப்பட்டி அருகே உள்ள இனாம்கோவில்பட்டி கிராமம் ரெட்ட மலையில் தனியார் கிரஷர் ஒன்று அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பகுதியில் கிரஷர் அமைக்கப்பட்டால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள் முழுமையாக அழிந்துவிடும் என்றும், கால்நடை வளர்ப்பு முற்றிலும் தடைபட்டு மக்களின் வாழ்வாதாரம் பொய்த்துப் போகும் என்றும் கிராம மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களை அந்தப் பகுதி மக்கள் நடத்தி வந்தனர். மக்கள் போராட்டத்தின் காரணமாக இந்த கிரஷர் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மேலும், தங்களது எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய, மணப்பாறை தொகுதி தவெக (TVK) சட்டமன்ற உறுப்பினர் ஆர். கதிரவனை நேற்று நேரில் சந்தித்த கிராம மக்கள், கிரஷர் அமைக்கும் பணியை நிரந்தரமாகத் தடுக்கக் கோரி மனு அளித்தனர். இருப்பினும், கிராம மக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கிரஷர் வேலைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த ஜூன் 1-ஆம் தேதி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இன்று மீண்டும் அந்தப் பகுதியில் கிரஷர் அமைப்பதற்கான பணிகள் பலத்த பாதுகாப்புடன் தொடங்கின.

இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த கோபி என்ற கோபாலகிருஷ்ணன் (29) என்ற வாலிபர், அங்குள்ள 11KV உயர் அழுத்த மின் கம்பத்தில் மளமளவென ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், "இங்கு கிரஷர் அமைத்தால் நான் உயர் அழுத்த மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொள்வேன்" என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு சம்பவ இடத்தில் திரண்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கிரஷர் நிர்வாகத்தினர், உடனடியாகப் பணிகளை நிறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள், மின் கம்பத்தில் இருந்த கோபாலகிருஷ்ணனிடம் நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்தனர். பணிகள் நிறுத்தப்பட்டதை உறுதி செய்த பின்னரே, அவர் மின் கம்பத்தில் இருந்து பாதுகாப்பாகக் கீழே இறங்கினார். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாழ்வாதாரத்தைக் காக்க இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறிப் போராடிய சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Manapparai #CrusherProtest #RettaiMalai #YouthProtest #SuicideThreat #TVKMLA #VaiyampattiPolice #LocalIssuesTamil #BreakingNewsTrichy

Socials: Handles: @trichyinsight @trichyinsight