Manapparai Road Rage Car Attacked 8 Arrested | Trichy Insight
மணப்பாறை அருகே பைக் மீது மோதுவது போல் சென்ற காரை ஆத்திரத்தில் வழிமறித்து அடித்து நொறுக்கிய 8 இளைஞர்களை மணப்பாறை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி, 25-05-2026: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது ஒரு கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தி, காரை முற்றிலும் அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் காமராஜர் சாலை அழகாநகர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் சுரேஷ் (43). இவர் தனது உறவினரான கணேசமுருகன் (51) என்பவருடன் தொழில் விஷயமாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூருக்கு காரில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து குளித்தலை நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு பகுதி அருகே இவர்களது கார் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதுவது போல் அதிவேகமாகச் சென்றுள்ளது.
இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். உடனடியாக அந்த இளைஞர்கள் தங்களுக்குள் மொபைல் போன் மூலமாகத் தகவல் பரிமாறிக்கொண்டு, மணப்பாறை - குளித்தலை சாலையில் வேகமாகச் சென்ற அந்த காரை பைக்குகளில் துரத்தத் தொடங்கினர். கலிங்கப்பட்டி என்ற இடம் அருகே வந்தபோது, காரை அந்த கும்பல் அதிரடியாக வழிமறித்து நிறுத்தியது. கார் நின்றவுடன் ஆவேசமடைந்த இளைஞர்கள், காரில் இருந்த சுரேஷ் மற்றும் கணேசமுருகன் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியதோடு, கையில் வைத்திருந்த கற்கள் மற்றும் கட்டைகளால் காரின் கண்ணாடிகள் மற்றும் பாடியை ஓட ஓட விரட்டி அடித்து நொறுக்கினர். இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த ரவுடித்தனம் குறித்து பாதிக்கப்பட்ட சுரேஷ் மணப்பாறை காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மணப்பாறை போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், சாலையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து காரை அடித்து நொறுக்கிய லஞ்சமேடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (29), பரசுராமன் (21), அழகுராஜா (22), தங்கபாண்டியன் (24), அழகாசாமி (28), பன்னீச்செல்வம் (24), கமலதாசன் (32) மற்றும் ராஜபூபதி (24) ஆகிய 8 இளைஞர்களையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான 8 பேரும் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Manapparai #RoadRage #CarAttack #CrimeNews #TrichyPolice #Arrested #Kulithalai #Kalingapatti #LawAndOrder #BreakingNewsTamil
Socials: Handles:
@trichyinsight @trichyinsight