மணப்பாறை SIPCOT அதிரடி ஆய்வு: அமைச்சர் கீர்த்தனா உத்தரவு | Trichy Insight
மணப்பாறை சிப்காட் மற்றும் மெகா உணவுப் பூங்காவில் அமைச்சர் ச.கீர்த்தனா நேரில் ஆய்வு நடத்தி, உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
27.05.2026: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் மெகா உணவுப் பூங்கா பகுதியில் நேற்று தொழில்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது, தொழிற்பூங்காவில் தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விரிவாகக் கலந்தாலோசித்தார்.
தேசிய நெடுஞ்சாலை 83-ல் அமைந்துள்ள இந்த மணப்பாறை சிப்காட் வளாகம், மொத்தம் 1097.36 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 840.09 ஏக்கர் நிலம் தொழில் நிறுவனங்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு, இதுவரை 30 நிறுவனங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாலை, ரயில், விமானம் மற்றும் துறைமுக வசதிகளை எளிதில் அணுகும் வகையில் அமைந்துள்ளதால், இந்த பகுதி உணவு பதப்படுத்துதல் மற்றும் பொது பொறியியல் சார்ந்த தொழில்களுக்கு மிக முக்கிய மையமாக உருவெடுத்து வருகிறது.
ஆய்வின் போது, தொழிற்பூங்காவிற்குள் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைப்புகள், தங்கு தடையற்ற குடிநீர் விநியோகம், எல்இடி தெருவிளக்குகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். நிலம் பெற்றுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசிய போது, மின்சாரம் மற்றும் கூடுதல் குடிநீர் வசதிகள் தேவை என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து, எவ்வித காலதாமதமும் இன்றி உள்கட்டமைப்பு பணிகளை உடனே முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதேபோல், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் ‘தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள்’ இணைந்து செயல்படும் புதிய கூட்டு முயற்சி திட்டத்தை அமைச்சர் முன்மொழிந்தார். இதன் மூலம் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதி இளைஞர்களுக்கு நவீன தொழில்துறை சார்ந்த திறன்கள் கற்றுத்தரப்படும். மேலும், இந்த தொழிற்பூங்காவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தவும், தொழிற்சாலைகளுக்கான சட்டரீதியான அனுமதிகளை ஒற்றைச்சாளர முறையில் விரைந்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Manapparai #SIPCOT #TrichyIndustrial #TamilNaduGovernment #IndustryMinister #TrichyUpdate #Employment #TrichyDevelopment #ManapparaiSIPCOT #SaveTrichy
Socials: Handles: @trichyinsight @trichyinsight