Illegal Liquor Sale At Musiri FL2 Bar 3 Arrested | Trichy Insight

Illegal Liquor Sale At Musiri FL2 Bar 3 Arrested | Trichy Insight

திருச்சியில் அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், விதிகளை மீறி சில்லறை விற்பனையில் ஈடுபட்ட முசிறி தனியார் மனமகிழ் மன்றத்தில் சார் ஆட்சியர் அதிரடி ஆய்வு நடத்தி 3 பேரை கைது செய்துள்ளார்.

மே 28, 2026: திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் திருச்சி - முசிறி நெடுஞ்சாலை ஓரத்தில் தனியார் மனமகிழ் மன்றம் (Recreation Club) ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு எப் எல் 2 (FL2) பார் உரிமத்துடன் மதுபானங்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டு, பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்த FL2 மனமகிழ் மன்ற நிர்வாகம், மன்றத்தின் உறுப்பினர்கள் அல்லாத வெளிநபர்களுக்கும் விதிமுறைகளை முற்றிலும் மீறி சட்டவிரோதமாக மது பாட்டில்களை சில்லறை விற்பனை செய்து வந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாகக் குடிகாரர்களின் கூட்ட நெரிசல் அலைமோதியுள்ளது.

இதுகுறித்து முசிறி சார் ஆட்சியர் (Sub-Collector) சுஷ்ரீ சுவாங்கி குந்தியாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் உடனடியாக நிகழ்விடத்திற்கு நேரில் சென்ற சார் ஆட்சியர், அதிரடி ஆய்வை மேற்கொண்டார். அப்போது பாரில் முண்டியடித்துக் கொண்டு மது பாட்டில்கள் வாங்கிக் கொண்டிருந்த வெளிநபர்களை அங்கிருந்து அதிரடியாக விரட்டியடித்தார். தொடர்ந்து, மனமகிழ் மன்றத்தில் விதிகளை மீறி சில்லறை விற்பனை செய்த குற்றத்திற்காக முசிறி பொன்னாங்கண்ணிபட்டியைச் சேர்ந்த பாரின் உரிமையாளர் வினோத், குளித்தலை தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்த காசாளர் சுதர்சன் மற்றும் முசிறி திருமுருகன் நகரைச் சேர்ந்த விற்பனையாளர் சரவணன் ஆகிய மூன்று பேரையும் கையும் களவுமாகப் பிடித்து முசிறி காவல் ஆய்வாளர் செல்லத்துரையிடம் ஒப்படைத்தார்.

இதைத் தொடர்ந்து, கோட்ட கலால் அலுவலக தனி வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் முசிறி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 32 மது பாட்டில்களுடன் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் முசிறி போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, பிடிபட்ட மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான முசிறி பகுதியின் இந்த முக்கிய புள்ளிகளால் உள்ளூர் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, முசிறியில் செயல்படும் இந்த FL2 தனியார் மனமகிழ் மன்ற பாரில், அரசு விதிகளின்படி ஒட்டப்படும் 10 ரூபாய் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டில்களை மீண்டும் வாங்குவதில்லை என்றும், ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதலாகக் கட்டணம் வசூலித்து பகல் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகவும் உள்ளூர் மதுப்பிரியர்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிளப் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என்ற விதியைத் தகர்த்து, லாப நோக்கில் சில்லறை விற்பனை செய்து வந்த இந்த பாரின் மீது கலால் துறையினர் சீல் வைக்கவும் தற்போது ஆலோசித்து வருகின்றனர்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #MusiriNews #FL2BarRaid #SubCollector #SushreeSwangiKhuntia #IllegalLiquorSale #MusiriPolice #TrichyUpdates #TasmacStrike #CrimeNews

Socials: Handles: @trichyinsight @trichyinsight