Neomax Rs 8000 Crore Scam Trichy Branch Complaint | Trichy Insight
மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.8000 கோடி மோசடி வழக்கில், திருச்சிக் கிளை நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
மே 28, 2026: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் (Neomax) நிதி நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் முதலீடு பெற்று, பின்னர் முதிர்வு தொகையை செலுத்தாமல் ஏமாற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 8000 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றது அம்பலமானது. இந்த மெகா மோசடி வழக்கில் தமிழகம் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், திருச்சிக் கிளையை நடத்தி கோடிக்கணக்கில் சுருட்டிய முக்கிய நிர்வாகிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவெறும்பூர் கள்ளர் தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நித்தியானந்தம், திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து தங்களின் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். திருவெறும்பூர் பெல் (BHEL) நிறுவனத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வரும் ரமேஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யா ஆகிய இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரகாஷ் நகரில் நியோமேக்ஸ் கிளையை நடத்தி வந்துள்ளனர். தங்களை நம்பி முதலீடு செய்த நித்தியானந்தம், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பல கோடி ரூபாய் வரை இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இதுகுறித்து கடந்த 3 ஆண்டுகளாகப் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தாலும், திருச்சிக் கிளை நிர்வாகிகள் மீது இதுவரை ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
பெல் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சுமார் 6,000 பேர் ரமேஷ் மற்றும் சுகன்யாவின் பேச்சை நம்பி இந்த நியோமேக்ஸ் கிளையில் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் பெல் வட்டாரத்தில் மட்டுமே 5,000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் மற்ற கிளைகளைச் சேர்ந்த 75 சதவீத நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், திருச்சியைச் சேர்ந்த இந்த தம்பதி மீது இன்னும் எஃப்.ஐ.ஆர் கூட போடாமல் காவல்துறையினர் மெத்தனமாக இருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சாடியுள்ளனர். சொகுசு கார்களுடன் வலம் வரும் ரமேஷ் மற்றும் சுகன்யா தம்பதியினர், தற்போது தங்களின் சொத்துக்களையும் கார்களையும் ஒவ்வொன்றாக விற்று வருவதாகவும், தங்களின் பணத்தைக் கொண்டு அவர்கள் ரியல் எஸ்டேட் செய்து உல்லாசமாக வாழும்போது, முதலீடு செய்த நடுத்தர மக்கள் தெருவில் நிற்பதாகவும் நித்தியானந்தம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தங்களிடம் 40 கோடிக்கும் அதிகமான நில ஆவணங்கள் இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர்கள், தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகும் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தை நாடப் போவதாக எச்சரித்துள்ளனர். மேலும், கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் ஆசை வார்த்தைகளையும் நம்பி பொதுமக்கள் யாரும் இனிமேல் இது போன்ற நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #NeomaxScam #FinancialFraud #Thiruverumbur #BHELTrichy #TrichyUpdates #NeomaxFraud #PublicIssue #CrimeNews #TrichyPressClub
Socials: Handles: @trichyinsight @trichyinsight