TVK MLA Ramesh Inspects Srirangam Amma Unavagam | Trichy Insight

TVK MLA Ramesh Inspects Srirangam Amma Unavagam | Trichy Insight

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மா உணவகம் மற்றும் இ-சேவை மையத்தில் தவெக எம்.எல்.ஏ ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நிலவிய சுகாதாரமற்ற அவல நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஒரு வார காலத்திற்குள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு அதிரடி கெடு விதித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மா உணவகம் மற்றும் இ-சேவை மையத்தில், ஸ்ரீரங்கம் தொகுதி தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் (MLA) ரமேஷ் திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து முதலமைச்சர் விஜய் நாள்தோறும் அரசுத் துறைகளை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரும் தனது தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கான மையங்களில் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

அம்மா உணவகத்தின் அவல நிலை:

எம்.எல்.ஏ ரமேஷ் மேற்கொண்ட இந்த ஆய்வில், ஸ்ரீரங்கம் அம்மா உணவகத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிக மோசமான நிலையில் இயங்கி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆய்வின் போது கண்டறியப்பட்ட முக்கிய குறைபாடுகள்:

சுகாதாரமற்ற சூழல்: உணவகத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையின் பின்புறம் தொடர்ந்து பலரும் சிறுநீர் கழித்து வருவதால், ஒட்டுமொத்த உணவகப் பகுதியும் கடுமையான துர்நாற்றத்துடனும் சுகாதாரமற்ற சூழலிலும் நிலவி வருகிறது.

வீணாகும் குடிநீர்: உணவகத்தின் உள்ளே பல்வேறு குடிநீர் குழாய்கள் உடைந்து, தண்ணீர் தொடர்ந்து வீணாகும் அவல நிலை நீடிக்கிறது.

பயன்படுத்த முடியாத கழிப்பறை: இந்த உணவகத்தில் மொத்தம் 12 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான கழிப்பறை முற்றிலும் பயன்படுத்த முடியாத பழுதடைந்த சூழலில் இருப்பதால், பெண் ஊழியர்கள் அன்றாடம் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேதமடைந்த தரைத்தளம்: உணவகத்தின் தரைப்பகுதி முற்றிலும் உடைந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

அதிகாரிகளின் அலட்சியம் - எம்.எல்.ஏ எச்சரிக்கை!

இது தொடர்பாக அம்மா உணவக ஊழியர்கள் தரப்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடடிவக்கையும் எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமன்றி, குறைபாடுகள் குறித்து புகார் அளித்த ஊழியர்களை சில அதிகாரிகள் இழிவாகப் பேசியுள்ள அதிர்ச்சித் தகவலும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த அவல நிலையை நேரில் பார்த்து கடும் அதிர்ப்தி அடைந்த ஸ்ரீரங்கம் தவெக எம்.எல்.ஏ ரமேஷ், "ஸ்ரீரங்கம் அம்மா உணவகத்தில் உள்ள அத்தனை குறைபாடுகளையும் முழுமையாகச் சரி செய்து, இன்னும் 1 வார காலத்திற்குள் அதனைத் தூய்மையான முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு அதிரடியாக வலியுறுத்தியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Hashtags: #TrichyInsight #Srirangam #TVKMLARamesh #AmmaUnavagam #ESevaiMaiyam #TrichyNews #SrirangamPolitics #TVKGovernment #TrichyCorporation #PublicGrievance

Socials: Handles: @trichyinsight @trichynews