திருவெறும்பூர் சிறுவன் கடத்தல்: சாலை மறியலால் பரபரப்பு | Trichy Insight

திருவெறும்பூர் சிறுவன் கடத்தல்: சாலை மறியலால் பரபரப்பு | Trichy Insight

திருச்சி அருகே கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கோரி நரிக்குறவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூன் 27, 2026. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்குடி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த சூர்யா மற்றும் ரம்பா தம்பதியினரின் 11 வயது மகன், நேற்று வீட்டின் பின்புறம் சென்றபோது திடீரென மாயமானார். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு காவல்துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மர்ம நபர்கள் கருப்பு நிற கார் மூலம் வந்து சிறுவனை சாலையோரத்தில் இறக்கிவிட்டுச் சென்றது தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுவன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அவனது தந்தை சூர்யா கண்ணீருடன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் பகுதியில் போதிய மின்விளக்கு வசதி, சிசிடிவி கேமராக்கள் மற்றும் முறையான சாலை வசதிகள் இல்லாததே இத்தகைய குற்றச்சம்பவங்களுக்குக் காரணமாக அமைவதாகப் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் பூலாங்குடி சாலையில் நரிக்குறவ மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையொட்டி அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாகச் செய்து தருவதாகவும், சிறுவன் கடத்தல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அதிகாரிகளின் சமாதானத்திற்குப் பிறகு பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனர். அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Thiruverumbur #Trichy #CrimeNews #ChildSafety #Protest #TamilNaduNews #LocalNews #TrendingNews #JusticeForKids #PoliceInquiry #TrichyUpdates

Socials: Handles: @trichyinsight @trichyinsight