கேமரா லென்ஸ் விவகாரம்: கடைக்காரருக்கு ₹80,000 அபராதம் | Trichy Insight

கேமரா லென்ஸ் விவகாரம்: கடைக்காரருக்கு ₹80,000 அபராதம் | Trichy Insight

துறையூர் அருகே பழுதான கேமரா லென்ஸை மாற்றித் தராமல் ஏமாற்றிய கடைக்காரருக்கு, திருச்சி நுகர்வோர் குறைதீர் ஆணையம் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

July 1, 2026: திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுகர்வோர்களை ஏமாற்றும் வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு முக்கிய தீர்ப்பை திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. காசு கொடுத்து வாங்கும் பொருட்களில் குறைபாடு இருந்தால், அதை மாற்றித் தராமல் வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் கடைகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது.

துறையூர் அருகே உள்ள புலிவளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது தொழில்முறை தேவைக்காக குமாரபாளையம் பகுதியில் கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவரிடம் ஒரு புதிய கேமரா லென்ஸ் வாங்கியுள்ளார். ஆனால், அந்த லென்ஸை பயன்படுத்திய சில நாட்களிலேயே அதில் கடுமையான தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன், உடனடியாக கடைக்காரர் சக்திவேலிடம் சென்று லென்ஸில் உள்ள கம்ப்ளைன்ட் பற்றி கூறியுள்ளார்.

அதற்கு கடைக்காரர் சக்திவேல், இந்த லென்ஸை கம்பெனிக்கு அனுப்பி புது லென்ஸ் மாற்றித் தருவதாக ரவிச்சந்திரனிடம் உறுதியளித்துள்ளார். இதனை நம்பி ரவிச்சந்திரனும் தனது லென்ஸை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்துள்ளார். ஆனால், நாட்கள் வாரங்களாகியும், வாரங்கள் மாதங்களாகியும் கடைக்காரர் லென்ஸை மாற்றித் தராமல் இழுத்தடித்துள்ளார். ரவிச்சந்திரன் நேரில் சென்று கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு சாக்குபோக்கு சொல்லி சக்திவேல் அவரை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

நீண்ட காலம் ஆகியும் தனக்கு லென்ஸும் கிடைக்காமல், பணமும் திரும்ப வராததால் ஏமாற்றமடைந்த ரவிச்சந்திரன், இதற்கு சட்டப்படிதான் தீர்வு காண வேண்டும் என்று முடிவு செய்தார். இதையெடுத்து அவர் திருச்சி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடைக்காரர் சக்திவேல் மீது முறைப்படி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நுகர்வோர் நீதிமன்றத்தில் தீவிரமாக நடந்து வந்தது.

வழக்கை முழுமையாக விசாரித்த திருச்சி நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, வாடிக்கையாளருக்கு தரமற்ற பொருளை வழங்கி, அதை மாற்றித் தராமல் இழுத்தடித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கடைக்காரர் சக்திவேலின் செயல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று சுட்டிக்காட்டினார். இதையெடுத்து, பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரனுக்கு நஷ்ட ஈடாகவும், அபராதமாகவும் மொத்தம் 80 ஆயிரம் ரூபாயை கடைக்காரர் சக்திவேல் வழங்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பளித்தார். நுகர்வோர் உரிமையை நிலைநாட்டிய இந்த தீர்ப்பு திருச்சி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Thuraiyur #ConsumerCourt #CameraLens #TrichyUpdates #LocalNews #ConsumerRights #TrichyCourt #CourtVerdict #TrichyDistrict #LawAndOrder

Socials: Handles:

@trichyinsight @trichyinsight