Trichy 10th Result Gov School Girls & Jail Inmates Toppers | Trichy Insight

Trichy 10th Result Gov School Girls & Jail Inmates Toppers | Trichy Insight

திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மாதிரிப் பள்ளி மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். திருச்சி மத்திய சிறை கைதிகளும் 98% தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

மே 21, 2026 – தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருச்சி மாவட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் திருச்சி மத்திய சிறை கைதிகள் மிகச் சிறப்பான தேர்ச்சி சதவிகிதத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகள் பிரிவில் டாப் இடங்களைப் பிடித்து திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 396 மாணவிகளில் 392 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 99 சதவீத தேர்ச்சியைப் பெற்றுத் தந்துள்ளனர். இப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ம. வர்ஷினி 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவிலும் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகள் பிரிவிலும் முதலிடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளார். இவரைத் தொடர்ந்து மாணவி உ. ஸ்ரீநிதி 491 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாணவி கு. காவியா 488 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த ஒரே பள்ளியில் 480-க்கும் மேல் 14 பேரும், 450-க்கு மேல் 47 பேரும், 400-க்கு மேல் 128 மாணவிகளும் மதிப்பெண்கள் குவித்து அசத்தியுள்ளனர். பாடவாரியாக அறிவியல் பாடத்தில் 8 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 3 பேர் மற்றும் கணிதத்தில் 2 பேர் என மொத்தம் 13 மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் மு. செல்வி மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டியுள்ளனர்.

இதேபோல், துவாக்குடியில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் தேர்வு எழுதிய 131 மாணவர்களும் (67 மாணவர்கள், 64 மாணவிகள்) முழுமையாக தேர்ச்சி பெற்று 100 சதவீத சாதனையை எட்டியுள்ளனர். இப்பள்ளியில் மாணவி ஜி. திவ்யஸ்ரீ 493 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், மாணவர் கே. குருதேவ் 492 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும், 450-க்கும் மேல் 65 மாணவர்களும், 400 முதல் 450 வரை 35 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகளில் மற்றொரு நெகிழ்ச்சியான மற்றும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், திருச்சி மத்திய சிறையில் இருந்து தேர்வு எழுதிய கைதிகள் 98% தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். சிறையில் இருந்து தேர்வு எழுத மொத்தம் 93 கைதிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 8 ஆண் கைதிகள் தேர்வுக்கு முன்பே ஜாமீனில் சென்றுவிட்டதால், மீதமுள்ள 85 கைதிகள் (82 ஆண்கள், 3 பெண்கள்) தேர்வு எழுதினர். இதில் 81 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 83 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ஒரு கைதி 363 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். சிறைச்சாலைகளிலும் கல்வி ஒளி வீசுவதை இந்த முடிவுகள் நிரூபித்துள்ளன.

Hashtags: #TrichyInsight #TrichyNews #10thResults #GovernmentSchoolTopper #Mannachanallur #TrichyCentralJail #InmatesSuccess #EducationFirst #TrichyAchievers #TamilNaduEducation #ProudMoment #LocalNews

Socials: Handles: @trichyinsight @trichyinsight