Trichy Airport 4.5 Kg Gold Seized From 30 Passengers | Trichy Insight

Trichy Airport 4.5 Kg Gold Seized From 30 Passengers | Trichy Insight

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 4.5 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

மே 20, 2026. திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வழியாக தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (DRI) மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து திருச்சிக்கு வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்து வந்த இந்த இரு விமானங்களிலும் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்த குருவிகள் தங்களது உடமைகளிலும், உடலிலும் தங்கத்தை மறைத்து கொண்டு வருவதாக கிடைத்த துல்லியமான தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அலர்ட் ஆயினர்.

இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து வந்து இறங்கிய இரு விமானங்களின் பயணிகளையும் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். குறிப்பாக சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளை தனியாக அழைத்துச் சென்று, அவர்களின் உடமைகள் மற்றும் ஆடைகளை அக்குவேறாக ஆணிவேறாக சோதனை செய்தனர். இந்த அதிரடி சோதனையின் போது, அந்த பயணிகள் தங்களது உடமைகளுக்குள்ளும், உள்ளாடைகளுக்குள்ளும் ரகசிய அறைகள் அமைத்து தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளிடமிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 4.5 கிலோ எடையுள்ள தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மெகா கடத்தல் சம்பவம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். திருச்சியில் ஒரே நாளில் நள்ளிரவில் அடுத்தடுத்து வந்த இரு விமானங்களில் 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் திருச்சி ஏர்போர்ட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyAirport #GoldSmuggling #DRISeizure #TrichyCustoms #SingaporeToTrichy #MalaysiaToTrichy #GoldSeized #TrichyInternationalAirport #BreakingNewsTrichy #TrichyCrime

Socials: Handles: @trichyinsight @trichyinsight