அரியமங்கலம் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை | Trichy Insight

அரியமங்கலம் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை | Trichy Insight

திருச்சி அரியமங்கலம் அருகே சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு மற்றும் புக்கிங் குளறுபடி நடப்பதாகக் கூறி பாரத் கேஸ் ஏஜென்சி அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

08 July 2026: திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே உள்ள தனரத்தினம் நகரில் ஜோதி என்ற பெயரில் பாரத் கேஸ் ஏஜென்சி ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏஜென்சி மூலம் அரியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த ஏஜென்சியில் சிலிண்டர் புக்கிங் செய்வதில் கடுமையான குளறுபடிகளும், விநியோகத்தில் பெரும் முறைகேடுகளும் நடப்பதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இதன் உச்சகட்டமாக, தங்களுக்கு சிலிண்டர் டெலிவரியே செய்யப்படாத சூழ்நிலையிலும், மொபைல் போனுக்கு வரும் OTP எண்களைத் தருமாறு ஊழியர்கள் கேட்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சரியான கால இடைவெளியில் சிலிண்டர் புக் செய்தாலும், அதனை விநியோகம் செய்யாமல் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதாகத் தெரிகிறது. மேலும் சிலருக்கு சிலிண்டர் கைக்கே வராத நிலையில், சிலிண்டர் வெற்றிகரமாக விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல், வராத சிலிண்டருக்கு மத்திய அரசின் மானியத் தொகையும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதாகப் பொதுமக்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர்.

சில வாடிக்கையாளர்கள் புக் செய்து மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் சிலிண்டர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தங்களது அன்றாட பணிகளைப் போட்டுவிட்டு, ஏஜென்சி அலுவலகத்திற்கு அலைந்து அலைந்து பொதுமக்கள் சோர்ந்து போயுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள், இன்று காலை தனரத்தினம் நகரில் உள்ள அந்த பாரத் கேஸ் ஏஜென்சி அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்டு அங்கிருந்த ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி அவர்களுக்குத் தொலைபேசி மூலம் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து ஸ்பாட்டிற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர், அங்கிருந்த வாடிக்கையாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் ஏஜென்சி ஊழியர்களிடம் விநியோகத் தாமதத்திற்கான காரணம் குறித்துக் கேட்டபோது, தங்களுக்கு கடந்த 35 நாட்களாகவே சிலிண்டர் சப்ளை வரவில்லை என்றும், அதனால் தான் இந்த தாமதம் என்றும் மழுப்பலாகப் பதிலளித்தனர். இதையடுத்து, இந்த முறைகேடு குறித்துச் சட்டப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும், உரிய நடவடிக்கை எடுக்கத் தான் பரிந்துரை செய்வதாகவும் பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.

சாதாரண ஏழை எளிய மக்களுக்குச் செயற்கையான சிலிண்டர் தட்டுப்பாட்டை உருவாக்கி, சில கேஸ் ஏஜென்சிகள் கள்ளச்சந்தையில் சிலிண்டர்களைப் பதுக்கி வைப்பதாகப் பொதுமக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புக்கிங் செய்த சாதாரண வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் தராமல், அதனை அதிக விலைக்கு வணிகப் பயன்பாட்டிற்கான ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு ரகசியமாக விற்று வருவதாகவும் மக்கள் பேசிக் கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட பாரத் கேஸ் நிறுவன உயர் அதிகாரிகள் திருச்சியில் உள்ள ஒவ்வொரு ஏஜென்சியையும் நேரடியாகக் கண்காணித்து, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே திருச்சி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Ariyamangalam #BharatGasScam #CylinderShortage #GasAgencyProtest #TrichyUpdates #PublicIssue #ConsumerRights #NavalpattuViji #TrichyAlert #BreakingNews

Socials: Handles: @trichyinsight @trichyinsight