காப்பீட்டு நிறுவனம் ஏமாற்றம்: திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Trichy Insight
பாலிசிதாரர் மாரடைப்பால் இறந்ததைத் தொடர்ந்து காப்பீட்டுத் தொகையைத் தர மறுத்த மேக்ஸ் லைஃப் காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ.8.59 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2026 ஜூலை 5. வாடிக்கையாளர்களுக்குச் சரியான முறையில் சேவை வழங்காமல் அலட்சியப்படுத்தும் நிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் தொடர்ந்து சாட்டையடி கொடுத்து வருகின்றன. அந்த வகையில், பாலிசிதாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினருக்குக் காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்துச் சேவைக் குறைபாடு ஏற்படுத்திய பிரபல காப்பீட்டு நிறுவனத்திற்கு, வட்டியும் முதலுமாகச் சேர்த்து ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
திருச்சி தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சாமிநாதன். இவா் கடந்த 14.02.2019 அன்று மேக்ஸ் லைஃப் காப்பீட்டு நிறுவனத்தில் (Max Life Insurance) 10 ஆண்டுகள் கால வரம்பிற்கு உட்பட்ட, ரூ. 6,59,631 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டு பாலிசி ஒன்றை எடுத்திருந்தாா். காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைப்படி முழு உடல் பரிசோதனை (Medical Check-up) செய்யப்பட்ட பிறகே அவருக்கு இந்த காப்பீடு வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இந்தச் சூழலில், பாலிசி எடுத்த சில மாதங்களிலேயே, அதாவது 11.09.2019 அன்று சாமிநாதன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு (Heart Attack) காரணமாக உயிரிழந்தாா்.
கணவரின் மறைவுக்குப் பின், சாமிநாதனின் சட்டப்பூா்வ வாரிசான அவரது மனைவி சுகந்தி மற்றும் அவரது மகன் ஆகியோர் தங்களுக்குரிய காப்பீட்டுத் தொகையைக் கோரி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விண்ணப்பித்தனா். ஆனால், மேக்ஸ் லைஃப் காப்பீட்டு நிறுவனத்தினர், "சாமிநாதனுக்கு காப்பீடு எடுப்பதற்கு முன்பே உடல் நலக்குறைவு இருந்துள்ளது. அதை அவர் திட்டமிட்டு மறைத்துப் பாலிசி எடுத்துள்ளார்" என்று அபாண்டமான ஒரு காரணத்தைக் கூறி காப்பீட்டுத் தொகையைத் தர மறுத்து நிராகரித்தனர்.
நிறுவனத்தின் இந்த ஏமாற்று வேலையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சுகந்தி, தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருமாறு கோரி கடந்த 06.11.2025 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் (Consumer Court) வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் மனுதாரா் சுகந்தி சாா்பில் வழக்குரைஞா் டி. கேசவன் ஆஜராகி நுகர்வோர் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்தார்.
இந்த மனுவை முழுமையாக விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா் மற்றும் உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமர்வு, காப்பீட்டு நிறுவனத்தின் மீதுள்ள சேவைக் குறைபாட்டை உறுதி செய்தது. அதோடு, காப்பீட்டுத் தொகையான ரூ. 6,59,631 ஐயும், நிறுவனத்தின் செயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ. 2 லட்சமும், மேலும் வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.8,59,631-ஐ மேக்ஸ் லைஃப் காப்பீட்டு நிறுவனம் உடனடியாக மனுதாரருக்கு வழங்க வேண்டுமென அதிரடியாக உத்தரவிட்டனா்.
"84B179D6-848E-4759-B7BF-E7E10ADFB753-removebg-preview.png"
Hashtags: #TrichyInsight #TrichyNews #ConsumerCourt #MaxLifeInsurance #CompensationOrder #TrichyDistrict #JusticeServed #InsuranceScam #Teppakulam #ConsumerRights #TrichyUpdates
Socials: Handles: @trichyinsight @trichyinsight