Trichy Mayor Inspected 1.20 Cr Stray Dog Shelter Work | Trichy Insight
திருச்சி மாநகராட்சியில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தெருநாய் சிகிச்சை மையங்கள் மற்றும் காப்பகப் பணிகளை மேயர் மு.அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
27 மே 2026: திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் உள்ள நான்கு மண்டலப் பகுதிகளிலும் சுமார் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் மற்றும் காப்பகங்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் மாநகராட்சி உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சியின் மண்டலம் 1-க்குட்பட்ட வார்டு 4 பஞ்சக்கரை அம்பேத்கர் நகர் பகுதி, மண்டலம் 5-ல் உள்ள வார்டு 11 கோணக்கரை பகுதி, மண்டலம் 3-க்குட்பட்ட வார்டு 46 கொட்டப்பட்டு ஜே.ஜே.நகர் மற்றும் வார்டு 36 அரியமங்கலம் குப்பை கிடங்கு வளாகம் ஆகிய நான்கு முக்கிய இடங்களில் இந்த புதிய தெருநாய் காப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) மையங்களுக்கு அருகிலேயே இந்த புதிய காப்பகங்கள் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கருத்தடை மற்றும் தடுப்பூசி பணிகளுடன் சேர்த்து, நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கான சிகிச்சையையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க முடியும் என மேயர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது திருச்சியில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய விபரங்களையும் மேயர் மு.அன்பழகன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். சமீபத்தில் நகரம் முழுவதும் நடத்தப்பட்ட முறையான கணக்கெடுப்பின்படி, திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 43,767 தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக, இதுவரை சுமார் 32,000 நாய்களுக்கு விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கருத்தடை அறுவை சிகிச்சையும், வெறிநாய்க்கடி தடுப்பூசியும் வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தெருநாய் காப்பகப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட கையோடு, மேயர் அன்பழகன் அவர்கள் உறையூர் சாலை ரோட்டில் உள்ள அம்மா உணவகம் மற்றும் மண்டலம் 5 அலுவலகம் அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கும் திடீர் விசிட் அடித்தார். அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை நேரில் சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்த அவர், தூய்மையைப் பராமரிக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தடையின்றி செய்து கொடுக்கவும் அங்குள்ள மாநகராட்சி பொறியாளர்களுக்கு அதிரடி அறிவுரைகளை வழங்கினார்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyCorporation #TrichyMayor #Anbalagan #StrayDogShelter #AnimalWelfare #TrichyUpdates #AmmaUnavagam #Ariyamangalam #Urayur
Socials: Handles: @trichyinsight @trichyinsight