போக்சோ வழக்கில் திருச்சி வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்! Trichy Insight

போக்சோ வழக்கில் திருச்சி வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்! Trichy Insight

திருச்சி தொட்டியம் அருகே 17 வயது பள்ளி சிறுமியை கடத்தி, கட்டாய தாலி கட்டி பாலியல் வன்கொடுமை செய்த கார்த்திக் என்ற இளைஞருக்கு திருச்சி நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

June 18, 2026. திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றம் பாலியல் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வகையில் மீண்டும் ஒரு அதிரடியான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கு சென்ற 17 வயது சிறுமியை கடத்தி, கட்டாய தாலி கட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட் புதன்கிழமை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த கொடூரமான சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அரங்கேறியுள்ளது. தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமி வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது தொட்டியம் பாலசமுத்திரம், மேலகார்த்திகைப்பட்டி பாப்பாத்திபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் கார்த்திக் (24) என்ற வாலிபர் அந்த சிறுமியை பின்தொடர்ந்துள்ளார். முள்ளிப்பாடி விநாயகர் கோவில் அருகில் வசம் இல்லாத நேரத்தில் சிறுமியை வழிமறித்து, பாலியல் ரீதியாக அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாக தனது வீட்டுக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு சிறுமியின் சம்மதம் இல்லாமல், மிரட்டி கட்டாய தாலி கட்டியதோடு மட்டுமில்லாமல், கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

பள்ளிக்கு சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், நாலாபுறமும் தேடி அலைந்துள்ளார். பின்னர் கார்த்திக்கின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி நடந்த கொடூரத்தை அழுதுகொண்டே தாயிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு துடித்துப்போன சிறுமியின் தாய் உடனே முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் உடனடியாக களமிறங்கிய முசிறி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கொடூரன் கார்த்திக்கை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் புதன்பிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு மற்றும் எதிர்ப்பு தரப்பு வாதங்களை முழுமையாக கேட்டறிந்த நீதிபதி சண்முகப்பிரியா, சிறுமி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் கார்த்திக்கை குற்றவாளியாக அறிவித்தார். இதையடுத்து குற்றவாளி கார்த்திக்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு திருச்சி மாவட்ட மக்களிடையே மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyCourt #PocsoAct #CrimeNews #Thottiyam #Musiri #JusticeServed #TrichyUpdates #CourtJudgment #SafetyFirst #TrichyLocalNews

Socials: Handles: @trichyinsight @trichyinsight