Trichy Customs Seizes 12 Drones From Singapore Flight | Trichy Insight
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமான பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 12 உயர்தர ட்ரோன்களை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
22-05-2026 அன்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் (Flight No. 6E-1008) பெரும் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் வந்த இறங்கிய பயணிகளை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு (CIU) அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்தனர். அப்போது இரண்டு ஆண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டபோது, யாரும் எதிர்பாராத வகையில் அதிநவீன ட்ரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பயணிகளிடமிருந்தும் தலா 6 ட்ரோன்கள் வீதம் மொத்தம் 12 உயர்தர பிளைங் ட்ரோன்கள் மற்றும் அதற்கான அதிநவீன டிஸ்ப்ளே ரிமோட் கண்ட்ரோலர்கள் கண்டறியப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியாவில் முறையான அனுமதியின்றி வெளிநாடுகளில் இருந்து வணிக ரீதியாக ட்ரோன்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 12 ட்ரோன்களும் 1962 ஆம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின் கீழ் (Customs Act, 1962) அதிகாரிகளால் அதிரடியாக சீஸ் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இந்த ட்ரோன்கள் அனைத்தும் பல லட்சம் மதிப்புள்ள 'DJI Avata 2' ரக ட்ரோன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், தற்போது ஒரே நேரத்தில் 12 நவீன கேமரா ட்ரோன்கள் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள நெட்வொர்க் யார், இந்த ட்ரோன்கள் எதற்காக கொண்டு வரப்பட்டன என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலைய வான் எல்லை மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் இந்த சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyAirport #TrichyCustoms #DroneSeizure #SmugglingAlert #SingaporeToTrichy #IndigoAirlines #CustomsDepartment #TrichyUpdate #BreakingNewsTrichy #TamilNaduNews
Socials: Handles: @trichyinsight @trichyinsight