திருச்சியில் DEO லஞ்சம் வாங்கி கைது | Trichy Insight
திருச்சியில் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு வர வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
July 1, 2026: திருச்சி மாவட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து அதிரடி சோதனைகளை நடத்தி லஞ்சப் பேய் பிடித்த அதிகாரிகளுக்கு செம ஆப்பு வைத்து வருகிறார்கள். அந்த வகையில், திருச்சி மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியை ஒருவரிடம் பில் பாஸ் செய்ய லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் (DEO) கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவம் திருச்சி கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் தேவதர்ஷினி. இவருக்கு வர வேண்டிய ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் டெட் (TET) தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான ஊதிய நிலுவைத் தொகைக்கான பில் பட்டியலுக்கு ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. இதற்காக திருச்சி மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலைக் கல்வி) பணியாற்றி வரும் முசிறியைச் சேர்ந்த சி. புகழேந்தி என்பவரிடம் விண்ணப்பித்திருந்தனர். இந்த பில் தொகையை ரிலீஸ் செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும் என்றால் தங்களுக்கு தனியாக கவனிப்பு வேண்டும் என்று அதிகாரி தரப்பில் இழுத்தடித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆசிரியை தேவதர்ஷினியின் கணவர் முருகேசன் என்பவர் மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தியை நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, இந்த பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றால் தனக்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் என்று புகழேந்தி கறாராகக் கேட்டுள்ளார். கஷ்டப்பட்டு உழைத்த பணத்தின் நிலுவைத் தொகையைப் பெற அரசு அதிகாரிக்கு எதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று நினைத்த முருகேசன், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (DVAC) போலீசாரிடம் இதுகுறித்து முறைப்படி புகாரளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிகாரி புகழேந்தியை பொறிவைத்து பிடிக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டனர். போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் முருகேசன் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு முருகேசன் கொடுத்த 30 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை அதிகாரி புகழேந்தி வாங்கிய போது, அங்கு ரகசியமாக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும் களவுமாக அமுக்கினர். இதையடுத்து அவரது கைகளை கெமிக்கல் தண்ணீரில் நனைத்து சோதனை செய்த போது லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தியிடம் திருச்சி மாவட்ட கல்வி அலுவலகத்திலேயே வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த அதிரடி கைதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீடு மற்றும் அலுவலக கோப்புகளையும் சோதனையிட திட்டமிட்டுள்ளனர். திருச்சியில் ஆசிரியர்களின் உரிமைகளை வழங்க வேண்டிய கல்வி அதிகாரியே லஞ்சம் வாங்கி கைதாகியுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyDEO #DVACRaid #BriberyArrest #Thiruverumbur #TrichyUpdates #LocalNews #AntiCorruption #TrichyEducation #GovernmentOfficer #TrendingTrichy
Socials: Handles:
@trichyinsight @trichyinsight