திருச்சி எஸ்பி செல்வநாகரத்தினத்தின் ஓராண்டு மெகா சாதனைகள்! | Trichy Insight

திருச்சி எஸ்பி செல்வநாகரத்தினத்தின் ஓராண்டு மெகா சாதனைகள்! | Trichy Insight

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் தலைமையில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, ரூ.11.8 கோடி மதிப்புள்ள 87% சொத்துக்கள் மீட்பு மற்றும் ‘கருடன்’ ஆப் அறிமுகம் உள்ளிட்ட ஓராண்டு கால மெகா சாதனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மே 26, 2026: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) செ. செல்வநாகரத்தினம், இகாப பொறுப்பேற்றது முதல் கடந்த ஓராண்டு காலத்தில் திருச்சி காவல்துறையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களும் இமாலய சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் ரவுடித்தனத்தை ஒடுக்கவும் கடந்த 2024-ல் 420 ஆக இருந்த சரித்திர பதிவேடு (History Sheeter) குற்றவாளிகளின் எண்ணிக்கை, தீவிர கண்காணிப்பு காரணமாக தற்போது 925 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் புதிதாக கண்டறியப்பட்ட 505 குற்றவாளிகளில் 73 கொலை குற்றவாளிகளும், 55 போக்சோ குற்றவாளிகளும் அடங்குவர். ரவுடிகளை ஒடுக்க கடந்த மே 10 அன்று திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் 364 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை வரவழைத்து முதன்முறையாக ‘ஆஜர் அணிவகுப்பு’ (HS Parade) நடத்தப்பட்டு எஸ்பி எச்சரித்துள்ளார். மேலும் 168 கொடூர குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் பலனாக, 2024-ல் 40 ஆக இருந்த கொலை வழக்குகள், 2025-ல் 34 ஆகவும், நடப்பு 2026-ல் 13 ஆகவும் அதிரடியாக குறைந்துள்ளது.

சொத்துக்களை மீட்பதில் திருச்சி மாவட்ட காவல்துறை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 2024-ல் 42% சொத்துக்கள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், எஸ்பி செல்வநாகரத்தினம் பொறுப்பேற்றது முதல் இதுவரை 641 குற்ற வழக்குகள் பதியப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக 87% வழக்கு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.11,86,30,889 ஆகும். இதில் குறிப்பாக சமயபுரம், துவரங்குறிச்சி, புத்தாநத்தம் பகுதிகளில் நடைபெற்ற பிரம்மாண்ட கொள்ளை வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு, களவு போன 25 கிலோ தங்க நகைகளை மீட்டது திருச்சி போலீசாரின் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் நீதிமன்ற விசாரணையில் இருந்த வழக்குகளைத் திறம்பட நடத்தி, 2024-ல் 2208 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை வாங்கித் தந்த நிலையில், 2025-2026 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கையை 10,036 ஆக உயர்த்தி குற்றவாளிகளுக்குப் பளார் தண்டனை பெற்றுத் தந்துள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பிலும் திருச்சி போலீஸ் அசுர வேகம் காட்டியுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட 339% கூடுதலாக செயல்பட்டு, 394 கஞ்சா வழக்குகள் மூலம் 317 கிலோ கஞ்சாவும், 1786 வழக்குகள் மூலம் 9795 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாலை விபத்துகளைத் தடுக்க விபத்துப்பகுதிகளில் (Hotspots) தனி கவனம் செலுத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.8.95 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குற்றங்களைக் கண்காணிக்க திருச்சி மாவட்டம் முழுவதும் 2,281 புதிய சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 48,233 பேரின் மொபைலில் ‘காவலன் உதவி ஆப்’ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அளவில் திருச்சி 4-வது இடத்தை பிடித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக ரவுடிகளைக் கண்காணிக்க, திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து “கருடன்” (Garudan) எனும் புதிய மொபைல் செயலியை உருவாக்கி கடந்த அக்டோபர் முதல் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கொள்ளிடம் எல்லைப் பகுதியில் நவீன 'காவலர் உதவி மையம்' அமைக்கப்பட்டுள்ளது. காவலர்களின் நலனுக்காக ஆயுதப்படை வளாகத்தில் விளையாட்டு மைதானங்களுடன் கூடிய 'காவலர் மன்றம்' மற்றும் 5 படுக்கைகளுடன் மேம்படுத்தப்பட்ட காவலர் மருத்துவமனை இன்று திறக்கப்பட்டுள்ளது. ஒரு விசித்திரமான மற்றும் பாராட்டத்தக்க முயற்சியாக, திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் தேங்கிக் கிடந்த 38.5 மெட்ரிக் டன் பழைய காகிதக் குப்பைகளை புகழூர் காகித ஆலைக்கு அனுப்பி, அதற்கு மாற்றாக 2080 ரிம் ஜெராக்ஸ் பேப்பர்களைப் பெற்று போலீஸ் ஆபீஸ்களுக்கு வழங்கி அசத்தியுள்ளனர். தற்போது 4 புதிய கார்கள், 45 பைஸ்கள் மற்றும் 11 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுடன் பெண் காவலர்களின் இரவு ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyPolice #SPSelvanagarathinam #GarudanApp #CrimeControlTrichy #SamayapuramRobbery #LawAndOrder #TrichyDistrict #PoliceAchievement #TamilNaduPolice

Socials: Handles: @trichyinsight @trichyinsight