திருச்சி திமுக பெண் நிர்வாகி மீது வாடகை ஆக்கிரமிப்பு புகார் | Trichy Insight

திருச்சி திமுக பெண் நிர்வாகி மீது வாடகை ஆக்கிரமிப்பு புகார் | Trichy Insight

திருச்சியில் பல ஆண்டுகளாக வாடகை தராமல் வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு, காலி செய்யச் சொன்னால் ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா மீது பெண் ஒருவர் கலெக்டரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ஜூன் 4, 2026: திருச்சி மாநகரில் ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் மீது சாதாரண பெண் ஒருவர் வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி ராமச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஷியா பேகம். இவருக்குச் சொந்தமான வீடு ஒன்றில், திமுக மகளிர் அணியின் திருச்சி மாவட்ட அமைப்பாளராக இருக்கும் கவிதா என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ஆரம்பத்தில் சரியாக இருந்தவர், அடுத்தடுத்து ஆளுங்கட்சி செல்வாக்கை பயன்படுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ரஷியா பேகம் தரப்பில் கூறப்படுவதாவது, திமுக நிர்வாகியான கவிதா கடந்த பல ஆண்டுகளாக இந்த வீட்டிற்குரிய வாடகையை சரியாக தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் வாடகை பாக்கி பல லட்ச ரூபாயை தாண்டியதால், ரஷியா பேகம் தனது வீட்டை காலி செய்யுமாறு கவிதாவிடம் நேரடியாக கேட்டுள்ளார். ஆனால் ஆளுங்கட்சி பதவியில் இருக்கும் தைரியத்தில் கவிதா வீட்டை காலி செய்ய மறுத்ததோடு, வாடகை பணத்தையும் கொடுக்க முடியாது என கறாராக பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்ற ரஷியா பேகத்திற்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகளே மிஞ்சின. வீட்டை காலி செய்யச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கவிதா எச்சரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ரவுடிகள் மற்றும் குண்டர்களை வைத்துக் கொண்டு ரஷியா பேகத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் கவிதா தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. போலீசில் புகார் கொடுத்தாலும் ஆளுங்கட்சி செல்வாக்கை வைத்து கவிதா தப்பித்து விடுவதால், ரஷியா பேகம் செய்வதறியாது திகைத்துப் போனார்.

காவல் துறை தரப்பில் முறையான தீர்வு கிடைக்காததால், இறுதியாக ரஷியா பேகம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் இந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், பல ஆண்டுகளாக வாடகை தராமல் வீட்டை ஆக்கிரமித்து வைத்திருக்கும் திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரவுடிகளின் மிரட்டலில் இருந்து தங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கி, தனது வீட்டை மீட்டுத் தர வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுங்கட்சி பெண் நிர்வாகி மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Trichy #DMK #PoliticalNews #HouseSquatting #CollectorComplaint #TrichyDistrict #RamachandraNagar #CrimeNews #TamilNaduPolitics

Socials: Handles: @trichyinsight @trichyinsight