ரவுடி சரபோஜி மீது குண்டர் சட்டம் பாயிந்தது | Trichy Insight
திருச்சி லால்குடி அருகே வாலிபரை பட்டாக்கத்தியால் குத்திய சென்னை வில்லிவாக்கம் சரித்திர பதிவேடு குற்றவாளி சரபோஜியை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மே 06, 2026. திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலரசூர் பகுதியில் நடந்த ஒரு சாதாரண வாக்குவாதம் இன்று ஒரு ரவுடியை ஓராண்டு சிறையில் தள்ளும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி மேலரசூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக அட்டு என்கிற மாவேந்தன் என்பவர் அதிவேகமாக டூவீலரில் சென்றுள்ளார். ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறாய் என்று சுபாஷ் கேட்டது மாவேந்தன் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த நாள் ஏப்ரல் 1-ம் தேதி மாவேந்தன் மற்றும் அவரது நண்பரான சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சரபோஜி உள்ளிட்ட கும்பல் சுபாஷிடம் தகராறு செய்துள்ளனர். நான் வண்டியில் வேகமாக போனால் உனக்கு என்ன என்று கேட்டு ஆபாசமாக திட்டியதோடு மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் சுபாஷின் தலை மற்றும் விலா பகுதியில் சரபோஜி சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சுபாஷின் தாய் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சரபோஜி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சரபோஜி ஏற்கனவே சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சரபோஜியின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப அவர்கள் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் சரபோஜியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த ஓராண்டு கால குண்டர் சட்ட ஆணை இன்று மத்திய சிறையில் உள்ள சரபோஜியிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2025 ஜனவரி முதல் தற்போது வரை மாவட்டத்தில் மொத்தம் 44 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் செயல்படும் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் மீது இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Lalgudi #Kallakudi #GoondasAct #TrichyPolice #CrimeNews #TamilNews #TrichyDistrict #LawAndOrder #ActionTaken #PublicSafety
Socials: Handles: @trichyinsight @trichynews