மணப்பாறையில் ஒற்றைக்கண் மனிதன் பீதி | Trichy Insight
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நள்ளிரவில் வாகனங்களை வழிமறித்து ஒற்றைக்கண் மனிதன் ஒருவன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நாளிதழ் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
07-07-2026. திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகப் பல்வேறு செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பி வருகிறது. இந்த வரிசையில் தற்போது மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகுருதம்பட்டியிலிருந்து வளையப்பட்டிக்குச் செல்லும் சாலையில், நள்ளிரவு நேரத்தில் பயங்கரமான தோற்றத்துடன் ஒரு மர்ம நபர் உலா வருவதாக நாளிதழில் வெளியான செய்தி திருச்சியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நள்ளிரவு நேரத்தில் இந்தச் சாலையில் வாகனங்கள் செல்லும்போது, சாலையின் நடுவே நின்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த ஒற்றைக்கண் மனிதன் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறான். சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், ஒரு கண் மட்டுமே தெரிந்த நிலையில், கருப்புச் சட்டை மற்றும் கருப்பு வேட்டி அணிந்து, சுருட்டை முடியுடன் வலம் வருவதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல், கையில் டால்ப்ளி எனப்படும் ஒருவித பாரம்பரிய வாத்தியத்தை வைத்துக்கொண்டு நள்ளிரவில் செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறித்துப் பயமுறுத்தி வருகிறான்.
நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் இந்த வழியாகச் சென்ற சில வாகனங்களை வழிமறித்த இந்த நபர், நேற்று இரவும் வளையப்பட்டி ஊருக்குச் சென்ற சில இளைஞர்களையும், அங்குள்ள பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் சாலையின் குறுக்கே சென்று வழிமறித்து நின்றுள்ளார். இவனுடைய இந்தத் திடீர் அமானுஷ்ய தோற்றத்தைப் பார்த்து நள்ளிரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்களும், வாகன ஓட்டிகளும் கடுமையான பயத்தில் உறைந்து போயுள்ளனர்.
தொடர்ந்து மணப்பாறை மற்றும் வளையப்பட்டி கிராமப் பகுதிகளில் இந்த மர்ம நபரின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், நள்ளிரவு நேரத்தில் தனியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இவன் நள்ளிரவில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக இப்படி அச்சுறுத்தும் வேடமிட்டுச் சுற்றுகிறானா அல்லது ஏதேனும் குறும்புக்காரர்கள் செய்யும் பிராங்கா என்பது இன்னும் தெரியவில்லை. எனவே, பொதுமக்களின் பயத்தைப் போக்கும் வகையில் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Manapparai #Pannapatti #Valayapatti #OneEyedMan #MysteriousMan #ViralRumor #TrichyUpdates #FakeNewsAlert #TrichyLocalNews #PublicSafety
Socials: Handles:
@trichyinsight @trichyinsight