Trichy Manapparai Ghost Marriage Ritual Festival | Trichy Insight
திருச்சி மணப்பாறை அருகே ஊர் செழிக்கவும் மக்கள் நோயின்றி வாழவும் ஆண் மற்றும் பெண் பூதங்களுக்கு 9 கிராம மக்கள் சேர்ந்து வினோத திருமணம் செய்து வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.
மே 28, 2026. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பெரியமணப்பட்டியில் பழமை வாய்ந்த தானா முளைத்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் சித்திரை பெருந்திருவிழா மிக பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சுற்றியுள்ள சுமார் 9 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பாரம்பரியமாக கொண்டாடும் இந்த திருவிழாவின் முக்கிய நிறைவு நிகழ்ச்சியாக படுகளம் திருவிழா நேற்று மிக வினோதமான முறையில் நடைபெற்றது.
இந்த வினோத வழிபாட்டின் ஒரு பகுதியாக சின்னமணப்பட்டியில் இருந்து மூங்கில் குச்சிகளால் பிரத்யேகமாக கட்டப்பட்டு வைக்கோல் மற்றும் துணிகளால் ஆண் மற்றும் பெண் பூதங்களின் மெகா சைஸ் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து அந்த இரு பூதங்களுக்கும் கிராம மக்கள் முன்னிலையில் முறைப்படி வினோத திருமணம் செய்து வைக்கப்பட்டது. தங்கள் ஊர் செழிக்கவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் எந்தவித நோய நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழவும் பன்னெடுங்காலமாக தங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்து இந்த பூதங்களின் வினோத வழிபாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக பெரியமணப்பட்டி கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் தெரிவித்தனர்.
பூதங்களுக்கு திருமணம் முடிந்த கையோடு, அங்கிருந்து காட்டுப்பகுதி வழியாக தாரை தப்பட்டை மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணப்பட்டி கிராமத்திற்கு அந்த மெகா சைஸ் பூதங்களை இளைஞர்கள் தங்களது தோள்களில் தூக்கிச் சென்றனர். வழிநெடுகிலும் பொதுமக்களும் பக்தர்களும் பூதங்களுக்கு தேங்காய், பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற படுகளம் நிகழ்ச்சியில், காந்தாரா வேஷம், காளி வேஷம், பேய் வேஷம், ராணுவ வீரர்கள் வேடம், ஆதிவாசிகள் வேடம் மற்றும் கரடி உள்ளிட்ட பல்வேறு விசித்திரமான வேடங்களில் வந்த உள்ளூர் இளைஞர்கள் தாரை தப்பட்டை இசைக்கு ஏற்ப வெறித்தனமாக ஆடிப் பாடி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விழாவின் இறுதி நிகழ்வாக மணப்பட்டியில் உள்ள தானாமுளைத்த மாரியம்மன் கோவில் முன்பு இந்த பூதங்கள் மற்றும் விசித்திர வேடமணிந்தவர்கள் முன்னும், பின்னுமாக ஓடி விளையாடி படுகளத்தை முறைப்படி நிறைவு செய்தனர். இதைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த வினோத பூத திருமண திருவிழாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Manapparai #TrichyFestival #GhostMarriage #TempleRituals #TamilNaduCulture #TrichyUpdates #ManapparaiNews #KantharaVesham #VillageFestival #TrichyDistrict
Socials: Handles
@trichyinsight @trichyinsight