திருச்சியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சிபிஎம் மறியல்! Trichy Insight
திருச்சி முடுக்குப்பட்டி அருகே பள்ளி, கோயில்களுக்கு பக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
June 18, 2026. திருச்சி முடுக்குப்பட்டி மற்றும் திருச்சி டூ புதுக்கோட்டை மெயின் ரோட்டில் நேற்று மாலை திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரிய அளவில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த அதிரடிப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் திருச்சி டு புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கிய கோயில்களுக்கு அருகில் இருக்கும் 717 டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி மாதங்கள் பல கடந்த நிலையிலும், இன்னும் முழுமையாக கடைகள் மூடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சில நூறு கடைகள் மட்டுமே பெயரளவில் மூடப்பட்டதே தவிர, இன்னும் ஏகப்பட்ட டாஸ்மாக் கடைகள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகிலேயே தங்கு தடையின்றி கோலாகலமாக இயங்கி வருகின்றன.
இந்த வரிசையில் தான் திருச்சி முடுக்குப்பட்டி அருகே திருச்சி டூ புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஒரு டாஸ்மாக் கடை, அந்தப் பகுதியில் இருக்கும் பள்ளி மற்றும் கோயில்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் இருந்து வந்துள்ளது. இந்த கடையை உடனே அகற்றக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கொதித்தெழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் நேற்று அந்த கடையை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து தங்களது கண்டனங்களை முழக்கங்களாக எழுப்பினர்.
முதலமைச்சர் அறிவித்த 717 கடைகள் மூடல் என்கிற அறிவிப்பு வெறும் பேப்பரோடு நின்று விடாமல் உடனடியாக முடுக்குப்பட்டி டாஸ்மாக் கடை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளை மூட அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறாராக வலியுறுத்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த கடையை இடமாற்றம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. திருச்சியின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த திடீர் போராட்டத்தால் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #TasmacProtest #Mudukkupatti #PudukkottaiRoad #CPIM #TrichyTraffic #CMVijay #PublicProtest #TrichyCity #Alert #TamilNaduGovernment
Socials: Handles: @trichyinsight @trichyinsight