திருச்சியில் கார் லாரி விபத்து 4 பேர் பலி! Trichy Insight
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் காரில் பரிகார பூஜை முடித்துவிட்டு திரும்பியபோது, முசிறி - துறையூர் நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி ஒரு வயது குழந்தையின் பெற்றோர் உட்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
02-06-2026: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் ஒரு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுவிட்டு திரும்பிய போது எதிர்பாராத விதமாக நேர்ந்த கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (வயது 31) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் தனக்குச் சொந்தமான எர்டிகா காரில் தனது மனைவி கவிதா (25), ஒரு வயது தங்களது பச்சிளம் குழந்தை ஏகவன், மாமனார் முருகேசன் (50), மாமியார் சித்ரா (45), மைத்துனர் கார்த்திக் (29) மற்றும் முருகேசனின் மற்றொரு மகளான நர்மதா (28) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கொடுமுடி கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு மைத்துனர் கார்த்திக்கிற்கு பரிகார பூஜைகளை முடித்துவிட்டு, முருகேசனின் குடும்பத்தினரை பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூரில் இறக்கி விடுவதற்காக கார் திருச்சி நோக்கிப் பயணித்துள்ளது.
கார் முசிறி டூ துறையூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஜம்புநாதபுரம் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, துறையூர் பகுதியில் இருந்து எதிரே முசிறி நோக்கி அதிவேகமாக லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று காரின் மீது கண் இமைக்கும் நேரத்திற்குள் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த கோர விபத்தின் வேகம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், எர்டிகா காரின் முன்பகுதி முற்றிலும் நசுங்கி உருக்குலைந்து போனது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மைத்துனர் கார்த்திக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும் 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜம்புநாதபுரம் போலீசார், காரின் இடிபாடுகளுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகேசன், கவிதா, நர்மதா, சித்ரா மற்றும் ஒரு வயது குழந்தை ஏகவன் ஆகிய ஐந்து பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி மாமனார் முருகேசன் மற்றும் பாலசுப்ரமணியனின் மனைவி கவிதாவும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
இந்த கொடூர விபத்தில் ஒரு வயது பச்சிளம் குழந்தை ஏகவன் தனது தாய் கவிதா மற்றும் தந்தை பாலசுப்ரமணியன் ஆகிய இருவரையும் ஒரே நாளில் இழந்து அனாதையாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காட்சி பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. மேலும் காயமடைந்த சித்ரா மற்றும் நர்மதா ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று விபத்து நடந்த இந்த முசிறி - துறையூர் மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் இதுவரை நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இனிமேலாவது இந்த ஆபத்தான வளைவுகள் மற்றும் சாலைகளில் விபத்துகள் நடக்காதவாறு வேகத்தடைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகளை வைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Trichy #Musiri #Thuraiyur #RoadAccident #Srirangam #Jambunathapuram #LorryCarCrash #HighwaySafety #BreakingNewsTrichy #TrichyDistrict
Socials: @trichyinsight @trichyinsight