Trichy Jobs: 13,000+ Vacancies in New Nike Shoe Factory | Trichy Insight
திருச்சியின் நாவல்பட்டு ELCOT வளாகத்தில் ரூ. 514 கோடியில் அமையவுள்ள தென் கொரிய காலணி தொழிற்சாலைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது; இதன் மூலம் 13,364 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உறுதியாகியுள்ளது.
June 12, 2026. திருச்சி மக்களுக்கு ஒரு மிகப்பெரிய குட் நியூஸ் வந்திருக்கு. தமிழ்நாட்டின் மையப்பகுதியான நம்ம திருச்சியை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான வேலைகள் படுவேகமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சியின் நாவல்பட்டில் உள்ள ELCOT சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) சுமார் 69 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான தொழிற்சாலை அமைக்க தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான TKG Taekwang India Private Limited ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்காக இந்நிறுவனம் சுமார் ரூ. 514 கோடி முதலீடு செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற நைக் (Nike) போன்ற பிராண்டுகளுக்கான நான்-லெதர் (Non-Leather) விளையாட்டு காலணிகளை தயாரிப்பதில் இந்த நிறுவனம் சர்வதேச அளவில் பெயர் பெற்றது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 8 ஆம் தேதி நடந்த அலகு ஒப்புதல் குழு கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ELCOT நிறுவனம் 28 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் கே.பி. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்சாலை மூலம் ஆண்டுக்கு சுமார் 14.98 மில்லியன் ஜோடி ஸ்போர்ட்ஸ் காலணிகள் தயாரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன் மூலம் திருச்சியில் மொத்தம் 13,364 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கப்போகிறது. இதில் 11,629 பெண்கள், 1,602 ஆண்கள் மற்றும் 133 திருநங்கைகள் பயன்பெற உள்ளனர். திருச்சியின் வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பெண்களுக்கு இவ்வளவு பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கப்போகும் மிக முக்கிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
பொதுவாக நாவல்பட்டு ELCOT வளாகம் தகவல் தொழில்நுட்பம் (IT) சார்ந்த நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டது என்றாலும், இந்த அளவுக்கு பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் என்பதால் இதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் இந்த பணிகளை முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறது. இந்த தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 5,453.5 கோடி மதிப்பிலான ஏற்றுமதியை செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர், நாவல்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இந்த திட்டம் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரப்போவது உறுதி.
Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyJobs #NavalpattuELCOT #TrichyDevelopment #EmploymentNews #TamilNaduIndustry #JobVacancy2026 #TrichyUpdates #WomenEmployment #TKGTaekwang #NikeShoes
Socials: Handles: @trichyinsight @trichyinsight