திருச்சி பாலக்கரை திருமண வீட்டில் 22 பவுன் நகை திருட்டு | Trichy Insight
திருச்சி பாலக்கரையில் இன்னும் இரு தினங்களில் திருமணம் நடக்கவிருந்த வீட்டில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகளை அள்ளிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மே 26, 2026: திருச்சி மாநகரப் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கூட நள்ளிரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், திருச்சி பாலக்கரை பகுதியில் திருமண வீட்டை நோட்டமிட்டு நள்ளிரவில் மர்ம நபர்கள் நகைகளைத் திருடிச் சென்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சி பாலக்கரை ரெட்டைபிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆ. ஜோசப் இருதயராஜ் (67). இவருடைய மகன் ஆலனுக்கு வரும் மே 28-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் நடக்கவிருப்பதால் அந்த குடும்பமே மிகுந்த மகிழ்ச்சியிலும், திருமண வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஜோசப் இருதயராஜ், அவருடைய மகன் ஆலன் மற்றும் குடும்பத்தினர் திருமணத்திற்குத் தேவையான பளபளக்கும் புதிய தங்க நகைகள், பட்டுத் துணிகள் மற்றும் தேவையான பல பொருட்களைப் பர்ச்சேஸ் செய்துவிட்டு இரவு 10 மணியளவில் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
திருமணப் பொருட்கள் வாங்கிய சந்தோஷத்தில், குடும்பத்தினர் அனைவரும் நள்ளிரவு 2 மணி வரை வீட்டில் அமர்ந்து உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அதன்பின்னர் களைப்பு காரணமாக அனைவரும் அயர்ந்து தூங்கியுள்ளனர். இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், நள்ளிரவு நேரத்தில் நைசாக வீட்டிற்குள் புகுந்துள்ளனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, வீட்டில் மர்ம நபர்கள் யாரோ வந்து சென்றதற்கான அடையாளங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் சந்தேகமடைந்து உடனடியாக அறைக்குள் சென்று பீரோவைத் திறந்து பார்த்தபோது, அவர்களுக்குப் பேரிடியாக ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. திருமணத்திற்காக ஆசை ஆசையாக வாங்கி வைக்கப்பட்டிருந்த 22 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. திருமண நாளுக்கு சில தினங்களே உள்ள நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் திருடுபோனதால் மணமகன் குடும்பத்தினர் செய்வதறியாது கதறி அழுதனர்.
இந்த துணிகரத் திருட்டு சம்பவம் குறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் ஜோசப் இருதயராஜ் உடனடியாகப் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருமண வீட்டை நோட்டமிட்டு இந்த கைவரிசையைக் காட்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #PalakaraiRobbery #GoldTheft #TrichyCrime #WeddingHouseTheft #PalakaraiPolice #TrichyLocalNews #CrimeAlertTrichy #TamilNaduNews #TrichyCity
Socials: Handles:
@trichyinsight @trichyinsight