திருச்சியில் 6 மாத குழந்தை கடத்தல்! Trichy Insight
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பகுதியில் உடல்நலம் சரியில்லாத குழந்தையுடன் இருந்த தாயிடம் தந்திரமாக பேசி, 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை பிடிக்க தனிப்படை போலீசார் தஞ்சாவூருக்கு விரைந்துள்ளனர்.
31-05-2026: திருச்சி மாநகரில் பரபரப்பாக செயல்பட்டு வரும் பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பகுதியில் இன்று நெஞ்சை உலுக்கும் ஒரு அதிர்ச்சிகரமான குழந்தை கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி தெப்பக்குளம் அடுத்த கீழ ஆண்டார் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருடைய மனைவி கஜலட்சுமி (வயது 28). இந்த தம்பதியினருக்கு 6 மாதத்தில் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக திருச்சி பஞ்சப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கஜலட்சுமியின் 6 மாத பெண் குழந்தைக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன தாய் கஜலட்சுமி, தனது குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் கஜலட்சுமி குழந்தையுடன் காத்துக்கொண்டிருந்த போது, அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்ம பெண் ஒருவர் வந்துள்ளார். அந்த பெண் கஜலட்சுமியிடம் மிகவும் தந்திரமாக பேசி, குழந்தை மீது மிகுந்த அன்பு காட்டுவது போல் நடித்து, சில நிமிடங்களிலேயே அவரிடம் நட்பாக பழகியுள்ளார்.
அதன் பின்னர் அந்த மர்ம பெண், கஜலட்சுமியையும் அவரது குழந்தையையும் சமாதானப்படுத்தி திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமர்ந்து பேசி விபரம் கேட்டுக்கொண்டிருந்த போது, கஜலட்சுமியின் கவனத்தை தந்திரமாக திசைதிருப்பிய அந்த பெண், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கையில் இருந்த 6 மாத பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து நைசாக கடத்திச் சென்று மறைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தையும் அந்த பெண்ணும் இல்லாததை கண்டு தாய் கஜலட்சுமி அதிர்ச்சியில் உறைந்து போனார்.
பேருந்து நிலையம் முழுவதும் அழுதுகொண்டே தேடியும் குழந்தை கிடைக்காததால், கஜலட்சுமி உடனடியாக எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று கண்ணீருடன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்த எடமலைப்பட்டி புதூர் போலீசார், பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்திய அந்த மர்ம பெண் தஞ்சாவூர் நோக்கி பேருந்தில் தப்பிச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை பத்திரமாக மீட்க திருச்சி எடமலைப்பட்டி புதூர் தனிப்படை போலீசார் தற்போது அதிரடியாக தஞ்சாவூருக்கு விரைந்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Trichy #Panjapur #BabyKidnapped #TrichyPolice #EdamalaipattiPuthur #CrimeNewsTamil #Thanjavur #BreakingTrichy #PublicAlert #TrichyDistrict
Socials: @trichyinsight @trichyinsight