திருச்சியில் ரூ.144 கோடியில் பஞ்சப்பூர் வணிக மையம் ரெடி | Trichy Insight

திருச்சியில் ரூ.144 கோடியில் பஞ்சப்பூர் வணிக மையம் ரெடி | Trichy Insight

திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் அருகே ரூ.144.58 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பன்னோக்கு வணிக மையம் திறப்புக்கு தயார் நிலையில் உள்ளது.

July 2, 2026: திருச்சி மாநகரத்தின் அடையாளத்தையே மாற்றப்போகும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதன் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பன்னோக்கு வணிக மையம் தற்போது திறப்புக்கு முழுமையாக தயாராகியுள்ளது. திருச்சி மாநகராட்சி சார்பில் சுமார் 6.40 ஏக்கர் பரப்பளவில், நான்கு தளங்களுடன், ரூ.144.58 கோடி மதிப்பீட்டில் இந்த அதிநவீன வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பேருந்து முனையப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் இந்த வணிக மைய கட்டுமானத்தில் லேசான தொய்வு ஏற்பட்டது. ஆனால் தற்போது அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக முடிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.

தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக செல்லும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு இந்த மையம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையப்போகிறது. இந்த மையத்தின் தரைத்தளத்தில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட சில்லறை வணிகக் கடைகள் வரவுள்ளன. அதுமட்டும் இல்லாமல், முதல் தளத்தில் 36 கடைகளும், 10-க்கும் மேற்பட்ட மாடர்ன் உணவுக் கூடங்களும் அமைக்கப்பட உள்ளன. ஷாப்பிங் செய்ய வருபவர்கள் மற்றும் பயணிகளின் வாகனங்களை நிறுத்த அடித்தளத்தில் பிரம்மாண்ட சுரங்க வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 200 இருசக்கர வாகனங்களையும், 77 நான்கு சக்கர வாகனங்களையும் மிக பாதுகாப்பாக பார்க் செய்ய முடியும்.

சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு இந்த வளாகத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 14 கழிவறைகள், பெண்களுக்கு 28 கழிவறைகள், 35 யூடினல்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென 4 பிரத்யேக கழிவறைகள் என ஒரு பிரம்மாண்ட சுகாதார வளாகமே இங்கே ரெடி பண்ணியிருக்கிறார்கள். மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தளங்களுக்கு சென்று வர வசதியாக 6 அதிநவீன லிப்டுகள், எஸ்கலேட்டர்கள் எனப்படும் நகரும் படிக்கட்டுகள் மற்றும் சாய்வுதள பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக நவீன சிசிடிவி கேமராக்கள், தீயணைப்பு அமைப்புகள் மற்றும் தனியாக ஒரு செக்யூரிட்டி கண்ட்ரோல் ரூம் செயல்படவுள்ளது.

இந்த மெகா ப்ராஜெக்ட் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இந்த வணிக மையத்தை அடுத்த 15 ஆண்டுகளுக்கு பக்காவாக மெயின்டெய்ன் செய்ய பொது-தனியார் கூட்டுப் பங்களிப்பு அதாவது PPP மாடலில் ஒரு தகுதியான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு, பைனல் செய்யும் வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன. இந்த ஒப்பந்தம் முடிந்த கையோடு வணிக மையம் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இந்த பன்னோக்கு வணிக மையம் திருச்சியின் பொருளாதார மற்றும் வணிக வளர்ச்சியை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Panjapur #TrichyCorporation #PanjapurBusTerminus #TrichyDevelopment #SmartCityTrichy #TrichyUpdate #NammaTrichy #TrichyShopping #TrichyBusiness #Infrastructure

Socials: Handles: @trichyinsight @trichyinsight