Trichy Police Action Against Drugs 18 Arrested | Trichy Insight
திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் லேடி டீலர்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
05-07-2026 திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைக் கட்டுப்படுத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி ருத்ரதாண்டவத்தில் இறங்கியுள்ளனர். மாநகரத்தின் முக்கிய இடங்களான தில்லை நகர், கே.கே நகர், சென்ட்ரல், சத்திரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போலீசார் ரகசியக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி இந்த ஸ்பெஷல் ஆபரேஷனை நடத்தியுள்ளனர்.
இந்த அதிரடி சோதனையின் போது எடமலைப்பட்டி புதூர், அரியமங்கலம், கண்டோன்மெண்ட், செசன்ஸுகோர்ட், பொன்மலை, காந்தி மார்க்கெட் மற்றும் பாலக்கரை ஆகிய பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் மது பாட்டில்களைக் கள்ளத்தனமாக விற்பனை செய்த 18 பேரை போலீசார் ஒரே நாளில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மதுரை மெயின் ரோடு அன்பில் தர்மலிங்க நகர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா சப்ளை செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முகமது யாசிர் மற்றும் அரியமங்கலம் ஞான ஆரோக்கியம், கே.கே நகர் விஷால், கொட்டப்பட்டு ஹரிஹரன், கள்ளிக்குடி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கஞ்சா வழக்கில் சிக்கியுள்ளனர். அதேபோல் முடுக்குப்பட்டி ஆண்ட்ரஸ், கணபதிபுரம் ஆனந்த், எஸ்பிஐ காலனி தனபால், பொன்மலை சந்தை ஸ்டீபன் டேவிட் ராஜ், ஏர்போர்ட் விக்னேஷ் ஆகியோர் புகையிலை விற்ற வழக்கில் கைதாகியுள்ளனர். கல்பாளையம் அருணகிரி மதுபாட்டில்களுடன் கைதானார்.
இந்த வேட்டையின் உச்சகட்டமாக பாலக்கரை மற்றும் ஆலம் தெரு பகுதிகளில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகளை விற்று வந்த ஒரு பெரிய நெட்வொர்க்கை போலீசார் முறியடித்துள்ளனர். இதில் பாலக்கரை பிரதீப் ராஜ், ஆலம் தெரு சுவாதி மற்றும் பெண் டீலர்களான பரகத் நிஷா, இந்திராணி, அனிதா மேரி ஆகிய ஐந்து பேர் போதை மாத்திரைகளுடன் கையும் களவுமாக மாட்டினர். இவர்களிடம் இருந்து 29 போதை மாத்திரைகள், 250 கிராம் கஞ்சா, 350 கிராம் புகையிலை மற்றும் 23,600 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் போதைக்கு எதிராக போலீசார் எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Trichy #TrichyPolice #DrugBust #CrimeNews #TrichyCity #GanjaSeized #AntiDrugDrive #SaveYouth #Palakkarai #KKNagar
Socials: Handles: @trichyinsight @trichyinsight