திருச்சியில் ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி | Trichy Insight

திருச்சியில் ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி | Trichy Insight

திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஓசி அதிகாரி ஆரோக்கியசாமியிடம், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்த சென்னை நபர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2026 ஜூலை 5. திருச்சி மாநகரில் சமீபகாலமாக ஆன்லைன் முதலீடு மற்றும் பங்கு வர்த்தகம் (Share Market Investment) என்ற பெயரில் நடக்கும் நூதன பண மோசடிச் சம்பவங்கள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகின்றன. இதோ இப்போது, திருச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம், அவரது மகனின் நண்பரே நயவஞ்சகமாக ரூ.1 கோடி சுருட்டியுள்ள மெகா மோசடிச் சமப்வம் வெளிச்சத்திற்கு வந்து ஒட்டுமொத்த பாலக்கரை பகுதியையும் உலுக்கியுள்ளது.

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (65). இவர் மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (IOC) உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்குத் தனது மகனின் நண்பரான சென்னை தியாகராய நகர் (T. Nagar), முருகேசன் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தைப் பயன்படுத்திக் கொண்ட பார்த்திபன், ஆரோக்கியசாமியிடம் தான் பெரிய அளவில் பங்கு வர்த்தகம் (Online Trading) செய்து வருவதாகவும், இதில் முதலீடு செய்தால் கைநிறைய அள்ள அள்ளக் குறையாத லாபம் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறி மூளைச்சலவை செய்துள்ளான்.

மகனின் நண்பன் தானே என்று முழுமையாக நம்பிய ஆரோக்கியசாமி, தனது வாழ்நாள் உழைப்பான ஓய்வூதிய பணப்பலன் (Retirement Benefits) ரூ.60 லட்சம் மற்றும் தனது சொந்த சேமிப்புப் பணம் ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி தொகையை, கடந்த 2022-2023 காலகட்டங்களில் பல்வேறு தவணைகளாகப் பார்த்திபனின் வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலமாகவே அனுப்பி வைத்துள்ளார். ஆனால், பணம் கைக்கு வந்தவுடன் பார்த்திபனின் அசல் முகம் வெளிப்படத் தொடங்கியது. ஆரோக்கியசாமிக்கு லாபத் தொகையையும் கொடுக்காமல், அசல் முதலீட்டையும் திருப்பிக் தராமல் ஏமாற்றி வந்துள்ளான்.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆரோக்கியசாமி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது பணத்தை மீட்டெடுக்கப் போராடி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். பார்த்திபன் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததால், வேறு வழியின்றி ஆரோக்கியசாமி திருச்சி நீதிமன்றத்தில் (Trichy Court) தஞ்சமடைந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசடி ஆசாமி பார்த்திபன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர குற்றப்பிரிவு (City Crime Branch) போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் பார்த்திபன் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய பார்த்திபனைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த ஓய்வூதியப் பணத்தைப் பங்கு வர்த்தக ஆசையில் இது போன்ற போலி நபர்களிடம் கொடுத்து ஏமாறுவதைத் தவிர்த்து, திருச்சி மக்கள் எப்போதும் நிதி முதலீடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

"84B179D6-848E-4759-B7BF-E7E10ADFB753-removebg-preview.png"

Hashtags: #TrichyInsight #TrichyNews #OnlineScam #ShareMarketFraud #Palakarai #IOC #CityCrimeBranch #FinancialFraud #TrichyAlert #InvestmentScam #StayAlert #TrichyCrime

Socials: Handles: @trichyinsight @trichyinsight