திருச்சியில் ரவுடி பாதுஷா வெட்டிக்கொலை: 7 பேர் அதிரடி கைது!

திருச்சியில் ரவுடி பாதுஷா வெட்டிக்கொலை: 7 பேர் அதிரடி கைது!

திருவெறும்பூர் அருகே பிரபல ரவுடி பாதுஷா வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கள்ளக்காதலியின் தம்பி சூர்யா உட்பட 7 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஜூன் 11, 2026. திருச்சி திருவெறும்பூர் மற்றும் அரியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி படுகொலை வழக்கில், கள்ளக்காதலியின் தம்பி மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 7 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மகபூ பாஷா. இவருடைய மகன் பாதுஷா (24). இவர் அந்த பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு பிரபல ரவுடியாவார். இந்த நிலையில், கடந்த ஜூன் 7ஆம் தேதி நள்ளிரவு திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் செக் போஸ்ட், காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் பாதுஷா நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த ஒரு மர்ம கும்பல் அவரைச் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பாதுஷாவின் மனைவி பாத்திமா பீவி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொடூரக் கொலைக்குக் கள்ளக்காதல் விவகாரமே முக்கியக் காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அரியமங்கலம் காந்திஜி நகரைச் சேர்ந்த சூர்யா என்பவரின் அக்கா பவானி என்பவரோடு ரவுடி பாதுஷாவிற்கு நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சொந்த அக்காவின் இந்த கள்ள உறவு தம்பி சூர்யாவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சூர்யாவிற்கும் ரவுடி பாதுஷாவிற்கும் இடையே ஏற்கனவே பலமுறை தகராறு ஏற்பட்டு, கடுமையான முன்பகை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ரவுடியான பாதுஷா எந்த நேரத்திலும் தன்னை கொலை செய்துவிடக்கூடும் என்ற பயத்தில் சூர்யா இருந்துள்ளார். இதனால் முந்திக்கொள்ள நினைத்த சூர்யா, பாதுஷாவை தீர்த்துக்கட்டத் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பக்காவான ஸ்கெட்ச் போட்டுள்ளார். அதன்படி கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாதுஷாவை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ததை சூர்யா போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில் அரியமங்கலம் காந்திஜி நகரைச் சேர்ந்த மலையப்பன் மகன் சூர்யா (22), அரியமங்கலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கரிகாலன் மகன் குமார் என்ற சந்திரகுமார் (26), மற்றும் ஜீவானந்தம் நகரைச் சேர்ந்த இளங்கோவன் மகன் பிரசாத் (29) ஆகிய மூன்று பேரை போலீசார் முதலில் கைது செய்து விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து இக்கொலையில் தொடர்புடைய தீபக் (20), மணிகண்டன் (25) மற்றும் ஒரு சிறுவன் உட்பட மேலும் 3 பேரையும் திருவெறும்பூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறுவனை மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், சூர்யா உட்பட மற்ற 6 பேரையும் திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர். திருச்சியில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலி தம்பி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காட்டூர் மற்றும் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #RowdyBadusha #MurderCase #Thiruverumbur #Ariyamangalam #TrichyCrime #Kattur #BreakingNews #TrichyCity #Tiruchirappalli #CrimeUpdate

Socials: Handles: @trichyinsight @trichyinsight