திருச்சியில் கல்லூரி மாணவிக்குக் கொலை மிரட்டல் - இளைஞர் கைது | Trichy Insight

திருச்சியில் கல்லூரி மாணவிக்குக் கொலை மிரட்டல் - இளைஞர் கைது | Trichy Insight

திருச்சியில் தன்னைத் தவிர்த்து வந்த கல்லூரி மாணவியின் வீட்டிற்கே சென்று, அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி கத்தியைக் காட்டிய வாலிபரை துவாக்குடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

May 8, 2026. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த வாழவந்தான்கோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்சி டயாலிசிஸ் படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் (23) என்ற இளைஞருக்கும் இடையே கடந்த சில காலமாகக் காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சுமார் 15 நாட்கள் தனியாக வசித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் இருவரையும் கண்டுபிடித்து மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பெற்றோரிடம் சென்ற பிறகு, அந்த மாணவி பிரவீனுடன் பேசுவதைத் முற்றிலும் தவிர்த்து வந்துள்ளார். தனது அழைப்புகளை ஏற்காமல் தன்னை உதாசீனப்படுத்திய மாணவியின் செயலால் பிரவீன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மாணவியின் வீட்டிற்கே நேரடியாகச் சென்ற பிரவீன், அங்கு மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என மிரட்டியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மாணவிக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தால் நிலைகுலைந்து போன மாணவி, உடனடியாக துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த பிரவீனை புதன்கிழமை அன்று போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

விசாரணைக்குப் பிறகு பிரவீனை கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருச்சியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிக்குக் கத்திமுனையில் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களை ஆயுதமாகப் பயன்படுத்திப் பெண்களை மிரட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyCrime #Thuvakudi #Thiruverumbur #WomenSafety #CrimeAlert #CollegeStudent #PoliceAction #TrichyDistict

Socials: Handles: @trichyinsight @trichynews