தாளக்குடியில் ஆடு திருட்டு கும்பலை பிடித்த பொதுமக்கள் | Trichy Insight
திருச்சி நெம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி பகுதியில் தொடர்ந்து ஆடுகளை திருடி வந்த திருவானைக்காவல் கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சி, ஜூலை 6, 2026: திருச்சி சமயபுரம் மற்றும் நெம்பர் ஒன் டோல்கேட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே ஆடுகள் தொடர்ந்து திருட்டுப் போய் வந்த சம்பவம் கால்நடை வளர்ப்போர் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தாளக்குடி ஊராட்சியைச் சேர்ந்த இளவரசன் என்பவர் ஆடுகள் வளர்த்து வரும் நிலையில், அவருடைய ஆடுகள் அடுத்தடுத்து திருடப்பட்டன. இதுகுறித்து அவர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் பலமுறை புகாரும் அளித்திருந்தார். இளவரசன் மட்டுமன்றி தாளக்குடி, கீரமங்கலம், பிச்சாண்டார்கோவில், பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலும் நள்ளிரவு நேரங்களில் புகுந்து ஒரு மர்ம கும்பல் தொடர்ந்து ஆடுகளை அள்ளிச் சென்றுள்ளது.
அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் ஆடு திருட்டு சம்பவங்களால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், கொள்ளிடம் போலீசில் தொடர் புகார்களைக் கொடுத்த வண்ணம் இருந்தனர். போலீசாரும் ரோந்து பணிகளை மேற்கொண்டாலும் திருடர்கள் சிக்காமல் போக்கு காட்டி வந்தனர். இதனால் ஏரியா மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த திருட்டு கும்பலை நாமே கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று நைட்டோடு நைட்டாக ரகசியமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு ஸ்கெட்ச் போட ஆரம்பித்தனர்.
இந்நிலையில், நேற்று தாளக்குடி பகுதியில் அதே மர்ம கும்பல் மீண்டும் ஆடுகளை திருடுவதற்காக நோட்டமிட்டு, ஒரு ஆட்டை அள்ள முயன்றுள்ளனர். அப்போது ஏற்கனவே விழிப்புடன் மறைந்திருந்த தாளக்குடி ஏரியா பொதுமக்கள், மின்னல் வேகத்தில் செயல்பட்டு ஆடு திருட முயன்ற அந்த 4 நபர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். தப்பி ஓட முயன்ற அவர்களை பொதுமக்கள் பிடித்து வைத்துக்கொண்டு, உடனடியாக கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த போலீசார் அந்த 4 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் அதிரடி விசாரணையில், பிடிபட்டவர்கள் திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த அஜித் (19) மற்றும் நவீன் (21) என்பது தெரியவந்தது. மேலும், இவர்களுடன் ஆடு திருட்டில் ஈடுபட்ட மற்ற இரண்டு நபர்கள் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் என்பதும் அம்பலமானது. கடந்த சில வாரங்களாக தாளக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நடந்த அனைத்து ஆடு திருட்டு சம்பவங்களுக்கும் தங்களுக்கு தொடர்பு இருப்பதை இந்த கும்பல் போலீசாரிடம் அப்பட்டமாக ஒப்புக்கொண்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார், அஜித் மற்றும் நவீனை திருச்சி மத்திய சிறையிலும், பிடிபட்ட இரண்டு சிறுவர்களை அரசு சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர். பொதுமக்களின் இந்த அதிரடி விழிப்புணர்வு செயலால் தாளக்குடி பகுதியில் பெரிய நிம்மதி ஏற்பட்டுள்ளது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Trichy #Samayapuram #Tollgate #Thalakudi #KollidamPolice #Thiruvanaikaval #PublicAction #GoatTheft #AlertPublic #TrichyCrime Updates
Socials: Handles: @trichyinsight @trichyinsight