உறையூர் மின்தடை: மின் ஊழியர்களின் நெகிழ்ச்சி உழைப்பு | Trichy Insight

உறையூர் மின்தடை: மின் ஊழியர்களின் நெகிழ்ச்சி உழைப்பு | Trichy Insight

திருச்சி உறையூர் சாலை ரோட்டில் சாரம் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட தொடர் மின்தடையை நள்ளிரவிலும் பசி தூக்கம் பாராமல் சீரமைத்து வரும் மின் ஊழியர்களின் நெகிழ்ச்சியான கள நிலவரம்.

July 5, 2026. திருச்சி உறையூர் சாலை ரோட்டில் இருக்கும் எஸ் எம் எஸ் மருத்துவமனைக்கு எதிரே இன்று மதியம் ஒரு எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் திடீரென சரிந்து விழுந்ததில் அதன் வழியே சென்ற உயர் அழுத்த மின் கம்பிகள் கடுமையாக சேதமடைந்தன. இதன் காரணமாக மதியம் 1:30 மணிக்கு உறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் தடைபட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண பழுது என்று நினைத்த நிலை மாறி நேரம் செல்ல செல்ல இதன் பாதிப்பு தில்லைநகர் மற்றும் தென்னூர் வரை நீடித்தது.

பொதுவாக நம்ம வீட்டுல ஒரு அஞ்சு நிமிஷம் கரண்ட் இல்லைனாலே நமக்கு எவ்வளவு கோபம் வருது. உடனே போனை எடுத்து அதிகாரிங்களுக்கு கால் பண்ணி சண்டைக்கு போயிடுறோம். ஆனா இந்த விபத்து நடந்த அடுத்த நிமிடமே உறையூர் மற்றும் தென்னூர் பகுதி மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் களத்தில் இறங்கிட்டாங்க. மதியம் சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் மின்கம்பங்களில் ஏறி சீரமைப்பு பணிகளை தொடங்கினார்கள்.

மாற்று வழியில் மின்சாரம் வழங்க அவர்கள் எடுத்த தொடர் முயற்சிகள் அனைத்தும் அதிக லோடு காரணமாக அடுத்தடுத்து பழுதாகி கொண்டே இருந்தன. இடையில் புத்தூர் அக்ரஹாரத்தில் HT jumber கட் ஆனது மற்றும் தில்லைநகர் ஃபீடர் பிரேக்டவுன் ஆனது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. வத்துக்கார தெரு, பாக்குப்பட்டை, வந்திக்கார தெரு என அடுத்தடுத்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. பொதுமக்கள் பலரும் எப்போது மின்சாரம் வரும் என்று வாட்ஸ்அப் குரூப்களிலும் போன் மூலமும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இப்போது நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மதியம் 1:30 மணிக்கு கையில் எடுத்த வேலையை சாப்பாடு, தூக்கம், குடும்பம் என எதையும் நினைக்காமல் இன்னும் அதே இருட்டில் மின் கம்பங்களில் நின்று ஊழியர்கள் போராடி வருகிறார்கள். கரண்ட் இல்லைனா உரிமையோட திட்டும் நாம் இந்த நள்ளிரவிலும் நமக்காக வியர்வை சிந்தி உழைக்கும் அந்த மனிதர்களின் வலியை யோசிக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் திருச்சி பொதுமக்கள் அனைவரும் மின்சார வாரிய ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து அவர்களின் உழைப்பை மதிக்க வேண்டும்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Trichy #Urayoor #TNEB #PowerCut #EBWorkers #Humanity #SalaiRoad #ThillaiNagar #TrichyUpdates #RespectEBWorkers

Socials: Handles: @trichyinsight @trichyinsight