நிதி நிறுவன மோசடி: முன்னாள் மேலாளர் முகமது ராஜா கைது | Trichy Insight

நிதி நிறுவன மோசடி: முன்னாள் மேலாளர் முகமது ராஜா கைது | Trichy Insight

திருச்சி வாழவந்தான்கோட்டை தனியார் நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முன்னாள் மேலாளர் முகமது ராஜாவை துவாக்குடி போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

July 03, 2026: திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்சி குண்டூர் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த முகமது ராஜா என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். மேலாளர் பதவியை தவறாகப் பயன்படுத்திய இவர், கடந்த சில ஆண்டுகளாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், சுயஉதவிக் குழுவினர் மாதாந்தம் முறையாக திரும்பச் செலுத்திய கடன் தொகையையும் நிதி நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் தன் சொந்த தேவைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நிதி நிறுவனத்தில் வழக்கமான ஆண்டு தணிக்கை அதாவது கணக்கு தணிக்கை நடைபெற்றது. அப்போது மேலாளர் முகமது ராஜா சுமார் 10 லட்சம் ரூபாய் வரை நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்திருப்பது ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன நிர்வாகம், அவரிடம் கையாடல் செய்த முழுத் தொகையையும் உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறு கேட்டுக்கொண்டது. மேலும் பணத்தை செட்டில் செய்ய அவருக்கு சில மாதங்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டது.

ஆனால், நிர்வாகம் கொடுத்த அவகாசத்தில் வெறும் 3 லட்சம் ரூபாயை மட்டுமே முகமது ராஜா திருப்பிச் செலுத்தியுள்ளார். மீதமுள்ள 7 லட்சம் ரூபாயை தராமல் இழுத்தடித்து ஏமாற்றி வந்த அவர், ஒரு கட்டத்தில் நிறுவனத்திற்குத் தெரியாமல் திடீரென தலைமறைவானார். இதனால் பணத்தை மீட்க முடியாத நிதி நிறுவனம், சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதன்படி திருச்சி மாவட்ட ஆறாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இது தொடர்பாக ஒரு முறையீட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் கையாடல் செய்து மோசடி செய்த முன்னாள் மேலாளர் முகமது ராஜா மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு துவாக்குடி போலீஸாருக்கு அதிரடி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் துவாக்குடி போலீஸார் கடந்த ஜூன் 4-ஆம் தேதி முகமது ராஜா மீது முறைப்படி மோசடி வழக்குப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த முன்னாள் மேலாளர் முகமது ராஜாவை துவாக்குடி போலீஸார் புதன்கிழமை அன்று கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyCrime #ThuvakudiPolice #FinanceFraud #Valavanthankottai #TrichyLocalNews #CrimeUpdates #TrichyPolice #FraudArrest #SHGLoanScam #GundoorTrichy

Socials: Handles: @trichyinsight @trichyinsight