சிஎம் விஜயை வரவேற்ற துரை வைகோ! Trichy Insight

சிஎம் விஜயை வரவேற்ற துரை வைகோ! Trichy Insight

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த முதலமைச்சர் விஜயை, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக எம்பி துரை வைகோ நேரில் வரவேற்றதுடன் கூட்டணி மாற்றம் குறித்து ஜூன் 27ல் முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

01-06-2026: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் புதிய முதலமைச்சருமான விஜய், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றார். இதில் தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சிக்கு வருகை தந்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக திருச்சிக்கு வருவதால் தமிழக வெற்றிக் கழகத்தினர் மாவட்டம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இன்று மதியம் சுமார் 2:45 மணியளவில் முதலமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது யாரும் எதிர்பாராத ஒரு அரசியல் திருப்பமாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின் முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான துரை வைகோ நேரில் வந்து முதலமைச்சர் விஜயை பொன்னாடை போர்த்தி மிக உற்சாகமாக வரவேற்றார். திமுக கூட்டணியின் முக்கிய தூணாக இருக்கும் மதிமுகவின் எம்பி, தவெக அரசை முன்னின்று வரவேற்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. முன்னதாக விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதும், தவெக கட்சியும் ஒரு திராவிட இயக்கம் தான் என்று துரை வைகோ தொடர்ந்து பாசிட்டிவாக பேசி வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரை வரவேற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். திருச்சி தொகுதியின் எம்பி என்ற முறையில் தமிழக முதலமைச்சரை வரவேற்பது தனது கடமை என்றும், அடுத்த சில நாட்களில் முதலமைச்சரைத் தனியாகச் சந்தித்து திருச்சியின் முக்கிய உள்கட்டமைப்பு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தங்களது மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் துரதிர்ஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் தவெக அரசுக்குத் தற்போது நேரடியாக ஆதரவு அளிக்க முடியாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டார். அதேநேரம், தங்களது பழைய கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளிப்பதை வரவேற்பதாகவும், மக்கள் தவெகவை தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுத்துள்ளதால் இந்த புதிய ஆட்சியின் செயல்பாடுகளை அடுத்த ஆறு மாத காலத்திற்குப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைவரையும் உற்றுநோக்க வைத்த மிக முக்கிய அறிவிப்பாக, மதிமுக வரும் காலங்களில் எந்தக் கூட்டணியில் தொடரப் போகிறது என்பது குறித்து விவாதிக்க ஜூன் மாதம் 27-ஆம் தேதி கட்சியின் உயர்நிலைக் குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக துரை வைகோ அறிவித்தார். அந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் ஓப்பனாக உடைத்துப் பேசியுள்ளார். இதனால் திமுக கூட்டணியில் மதிமுக நீடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், திருச்சி விமான நிலையத்தின் புதிய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்காக டெல்லி சென்று மத்திய அதிகாரிகளைச் சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியுள்ளதாகவும் துரை வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். முதலமைச்சர் விஜயின் வருகையையொட்டி திருச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மாநகரின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

Hashtags: #TrichyInsight #TrichyNews #CMVijay #ThalapathyVijay #TVK #DuraiVaiko #MDMK #TrichyAirport #TamilNaduPolitics #AllianceControversy #DMKAlliance #BreakingNewsTrichy

Socials: @trichyinsight @trichyinsight