Trichy Woraiyur Power Cut & Low Voltage Issues | Trichy Insight
திருச்சி உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டு மற்றும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால் பொதுமக்கள் விடிய விடிய தூக்கமின்றி தவித்துள்ளனர்.
15 ஜூன் 2026: திருச்சி மாநகரின் மிக முக்கிய குடியிருப்புப் பகுதியான உறையூரில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கடுமையான மின்வெட்டு மற்றும் லோ-வோல்டேஜ் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கைக்குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அதிகாலையில் வேலைக்குச் செல்வோர் என ஒட்டுமொத்த பொதுமக்களும் தூக்கத்தை தொலைத்து நரக வேதனையை அனுபவித்துள்ளனர். மின்சார வாரியத்தின் நுகர்வோர் வாட்ஸ்அப் குழுவில் மக்கள் விடுத்த அலறல் புகார்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
உறையூர் பகுதிக்கு உட்பட்ட வாலாஜா ரோடு, ராமலிங்கா நகர் முதலாவது மெயின் ரோடு, சிவா நகர், பெரிய செட்டி தெரு, பாய்க்காரத் தெரு போன்ற இடங்களில் நேற்று இரவு 10:40 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு மின்சாரம் வந்தாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டு கண்ணாமூச்சி காட்டியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் தங்களது புகார்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்.
இரவு 11:30 மணியைத் தாண்டியதும் மின்வெட்டுடன் சேர்த்து 'லோ-வோல்டேஜ்' பிரச்சினையும் விஸ்வரூபம் எடுத்தது. தியாகராஜா நகர், நாச்சியார்பாளையம், புதிய வெள்ளாளர் தெரு, பாத்திமா நகர் மற்றும் வந்திக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் மிகக் குறைந்த மின் அழுத்தமே (Low Voltage) இருந்துள்ளது. பல இடங்களில் 'ஒன் பேஸ்' (Single Phase) மட்டுமே மின்சாரம் வந்ததால், வீடுகளில் மின்விசிறிகள் கூட ஓடாமல் மக்கள் புழுக்கத்தில் தவித்துள்ளனர்.
நள்ளிரவு 1 மணி, 2 மணியைக் கடந்தும் இப்பிரச்சினை சரி செய்யப்படாததால், வாட்ஸ்அப் குழுவில் இருந்த பொதுமக்கள் எல்லையைத் தாண்டி கொந்தளித்தனர். "கைக்குழந்தைகளும், வயதானவர்களும் வீட்டில் இருக்கிறார்கள்; விடியற்காலையில் வேலைக்குச் செல்பவர்கள் எப்படித் தூங்கி எழுவது?" என்று மக்கள் குமுறினர். மேலும், அப்பகுதி உதவிப் பொறியாளரை டேக் செய்தும், மின் வாரிய எண்களுக்கு அழைத்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோடைக்காலம் முடிந்தும்கூட திருச்சியின் மையப் பகுதியில் உள்ள உறையூரில் இதுபோன்ற தொடர் நள்ளிரவு மின்வெட்டு ஏற்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு, உறையூர் துணை மின் நிலையத்தின் கட்டமைப்பைச் சீரமைக்க வேண்டும் என்றும், லோ-வோல்டேஜ் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் திருச்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Trichy #Woraiyur #PowerCut #TANGEDCO #LowVoltage #PublicOutrage #TrichyCorporation #TamilNaduPower
Socials: Handles: @trichyinsight @trichyinsight