Trichy 5 Young Officers Mass Team Details | Trichy Insight

Trichy 5 Young Officers Mass Team Details | Trichy Insight

திருச்சி மாவட்டத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் மாற்றியமைக்க, 30 வயதைக் கடந்த 5 பேர் கொண்ட இளம் அதிகாரிகளின் சிங்கப்படை தற்போது பொறுப்பேற்றுள்ளது திருச்சி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

18-06-2026: தமிழகத்தின் புவியியல் ரீதியான மையப்பகுதியான திருச்சி மாவட்டம், எப்போதும் வி.ஐ.பி-க்களின் நகரமாகவே பார்க்கப்படுகிறது. பன்னாட்டு விமான நிலையம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் (BHEL), என்.ஐ.டி (NIT) போன்ற மத்திய, மாநில அரசு நிறுவனங்களைக் கொண்டுள்ள இந்த மிக முக்கிய மாவட்டத்தை இனி புத்தம் புதிய பாதையில் வழிநடத்த, 5 பேர் கொண்ட இளம் சிங்கப்படை ஒன்று களமிறங்கியுள்ளது.

திருச்சியின் 'யங் பிரிகேட்' என்று அழைக்கப்படும் இந்த டீமின் முதல் சிங்கம், மாவட்டத்தின் புதிய ஆட்சியரான பிரத்திக் தாயள், ஐ.ஏ.எஸ். வெறும் 33 வயதேயான இவர், நிதித்துறை மற்றும் பட்ஜெட் மேலாண்மையில் கில்லாடி. சட்டப்படிப்பை முடித்த உடனே சிவில் சர்வீஸ் தேர்வை வென்ற இவர், தற்போது திருச்சியின் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளார். இவருக்குத் துணையாக மாநகராட்சியை ஸ்மார்ட்டாக்க களமிறங்கியுள்ளார் 31 வயதேயான இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீர பிரதாப் சிங். இயந்திரப் பொறியியல் பட்டதாரியான இவர், உளவுத்துறை மற்றும் பொதுத்துறையின் துணைச் செயலாளராகப் பணியாற்றிய வேகத்தோடு திருச்சி மாநகராட்சியின் 29-வது கமிஷனராகப் பொறுப்பேற்று சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்க முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

சட்டம்-ஒழுங்கைத் தன் இரும்புக்கரம் கொண்டு கண்காணிக்க வந்துள்ளார் 39 வயதான ஐ.பி.எஸ் அதிகாரி பிரவீண் உமேஷ் டோங்கரே. திருச்சியின் டிராபிக் மேலாண்மை, குற்றத்தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்ற சவால்களை இவர் தனது முதிர்ந்த, அதேசமயம் வேகமான பாணியில் கையாண்டு வருகிறார். இவர்களோடு சுற்றுச்சூழல் மற்றும் வன வளங்களைக் காக்கும் மிக முக்கிய பொறுப்பில் இணைந்துள்ளார் 33 வயதான ஐ.எஃப்.எஸ் அதிகாரி எஸ்.கிருத்திகா. மரக்கன்றுகள் நடுதல், உயிரின வள மேலாண்மை எனப் பசுமை திருச்சியை உருவாக்க இவர் தொடர்ந்து திட்டங்களை வகுத்து வருகிறார்.

அதிகாரிகள் டீம் இப்படியென்றால், இவர்களைத் தலைமை தாங்கி வழிநடத்தும் திருச்சியின் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான எஸ்.ரமேஷ் அவர்களின் வயதும் வெறும் 31 தான்! ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்று மிகக் குறுகிய காலத்தில் ஆன்மீக மற்றும் அரசுத் துறைகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள இவர்தான் இந்த 5 பேர் கொண்ட படையின் லீடர். நகர்ப்புற விரிவாக்கம், போக்குவரத்து நெரிசல், குடிநீர் மேலாண்மை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற திருச்சியின் நீண்டகால கோரிக்கைகளுக்கு இந்த 5 பேர் கொண்ட இளம் சிங்கப்படை தங்களது நவீன டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் வேகமான அணுகுமுறைகள் மூலம் நிச்சயம் ஒரு நல்ல விடியலைத் தரும் எனத் திருச்சி மக்கள் முழுமையாக நம்புகின்றனர்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #YoungSingapadai #TrichyCollector #PratikTayal #VeeraPrathapSingh #TrichySP #MinisterRamesh #TrichyDevelopment #SmartCityTrichy #RockfortCity

Socials: Handles: @trichyinsight @trichyinsight