TVK Leader Saravanan Arrested in 20Cr Fraud | Trichy Insight
புதுக்கோட்டையில் 100-க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி 20 கோடி ரூபாய் சுருட்டிய தவெக நிர்வாகி சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மே 11, 2026. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 20 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை தவெக மத்திய மாவட்டச் செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தவர் சரவணன். இவர், தன்னிடம் முதலீடு செய்யும் பணத்திற்குப் பல மடங்கு அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார். இவருடைய ஆசை வார்த்தைகளை நம்பி சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாயை இவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகப் பணத்தைப் பெற்றுக் கொண்ட சரவணன், வாக்குறுதி அளித்தபடி வட்டியும் தராமல், அசலையும் திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தங்களைச் சரவணன் ஏமாற்றுவதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரண்டு புகார் அளித்தனர். புகாரில் சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் சரவணன் மோசடி செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரானது மாவட்டக் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த சரவணனைத் தனிப்படை போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்தனர். தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட அளவிலான நிர்வாகியே இவ்வளவு பெரிய மோசடியில் சிக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் எனப் போராட்டங்கள் வெடித்துள்ளன. கைதான சரவணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்; இதன் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Hashtags: #TrichyInsight #Pudukkottai #TVK #FraudCase #SaravananArrest #MoneyFraud #PoliticalNews #CrimeUpdate #JusticeForPublic #PudukkottaiNews
Socials: Handles: @trichyinsight @trichynews