உறையூர் பள்ளியில் தவெக ரீல்ஸ் சர்ச்சை - திருச்சி தவெக செந்தில் அதிரடி!
திருச்சி உறையூர் அரசுப் பள்ளியில் தவெக மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையிலான நிர்வாகிகள் முதலமைச்சர் புகைப்படத்தை வைத்து ரீல்ஸ் எடுத்து சர்ச்சை கிளப்பியுள்ளனர்.
22 ஜூன் 2026. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசுப் பள்ளியில் நடந்த அரசியல் ரீல்ஸ் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் விமர்சனங்களைச் சந்தித்தது. இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே, அதைவிட மோசமாக, திருச்சி உறையூரில் உள்ள திருத்தாந்தோணி நகராட்சி தொடக்கப் பள்ளியில் தவெக மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதே பாணியில் ரீல்ஸ் எடுத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு பொறுப்புள்ள இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், கல்வி நிலையங்களைத் தங்களின் விளம்பரக் களமாகப் பயன்படுத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை ஒருபுறம் ஒழுக்கத்தைப் பேச, கீழ்மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் அதைச் சிறிதும் மதிக்காமல், சர்ச்சைகளைத் தேடிப் பிடித்து விளம்பரம் தேடுவது அக்கட்சியின் தலைமைக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்கள் பெறுவதற்காக, மாணவர்களின் கல்விச் சூழலை மாசுபடுத்தும் இத்தகைய செயல்கள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசுப் பள்ளிகள் என்பது அனைத்துக் கட்சிக்கும் அப்பாற்பட்ட பொது இடம். அங்கு தங்களின் அரசியல் அடையாளத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பது என்பது அதிகார துஷ்பிரயோகம் அன்றி வேறில்லை.
நாங்கள் இச்செய்தியை வெளியிடும்போது, சம்பந்தப்பட்ட நிர்வாகியின் ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் எங்களை ஏன் விமர்சிக்கிறீர்கள் என போர் தொடுக்கிறார்கள். உண்மையைச் சுட்டிக்காட்டுவது ஒரு ஊடகத்தின் கடமை. கல்வி நிறுவனங்களின் புனிதத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. தவறைச் செய்துவிட்டு, அதைச் சுட்டிக்காட்டினால் எதிர் கேள்வி கேட்பது, தங்களின் மீதான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் முதிர்ச்சியற்ற போக்கையே காட்டுகிறது. இதுபோன்ற செயல்களைத் தவெக தலைமை வேடிக்கை பார்க்காமல், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சியின் கல்வித் துறை அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, பள்ளி வளாகத்திற்குள் அரசியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. விளம்பரத்திற்காகப் பள்ளிகளைப் பயன்படுத்தும் போக்கை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்காகப் புறப்பட்டதாகக் கூறும் தவெக நிர்வாகிகள், முதலில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருச்சி மக்கள் இதுபோன்ற சுயநல அரசியலைத் தெளிவாகவே கவனித்து வருகிறார்கள் என்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் உணர வேண்டும்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #TVK #Senthil #CMVijay #Uraiyur #GovernmentSchool #PoliticalDrama #ReelsControversy #TamilNadu #BreakingNews #TrichyPolitics #Education #PublicAccountability
Socials: Handles: @trichyinsight @trichyinsight