TVK SR Sabari Defends Thiruverumbur MLA Navalpattu Viji | Trichy Insight

TVK SR Sabari Defends Thiruverumbur MLA Navalpattu Viji | Trichy Insight

துவாக்குடி பாறை குவாரிகளில் குப்பை கொட்டும் விவகாரம் மற்றும் தவெக கொடி நிற பெயிண்ட் சர்ச்சையில் சிக்கிய திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜிக்கு ஆதரவாக, அக்கட்சியின் முக்கிய புள்ளி எஸ்.ஆர்.சபரி காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

மே 29, 2026: திருச்சி திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, அரியமங்கலம் குப்பை கிடங்கு விவகாரம் மற்றும் அரசு அலுவலகத்திற்குத் தவெக கொடி நிற வர்ணம் பூசிய விவகாரங்களில் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார். குறிப்பாக, அரியமங்கலம் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் துவாக்குடி பகுதியில் கைவிடப்பட்ட ஆயிரம் அடிக்கும் மேல் ஆழமுள்ள பாறை குவாரிகளில் கொட்டி நிரப்பலாம் என்று அவர் பேசியது தொகுதிக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னாள் அம்மா பேரவை செயலாளரான எஸ்.ஆர்.சபரி, தற்போது எம்எல்ஏ நவல்பட்டு விஜிக்கு ஆதரவாக ஓப்பனாகக் களம் இறங்கியுள்ளார். விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் அளித்துள்ள பேட்டி, திருச்சி அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து எஸ்.ஆர்.சபரி அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், நமது திருவெறும்பூர் எம்எல்ஏ விஜி அண்ணன் மிகவும் வெகுளியான, எதார்த்தமான மனிதர். தொகுதி மக்கள், அதிகாரிகள் என யார் என்ன சொன்னாலும், அனைவரின் கருத்துக்களுக்கும் சமமாக மதிப்பு கொடுப்பவர். அவருடைய இந்த எதார்த்தமான குணத்தையும், அப்பாவியான நல்லெண்ணத்தையும் தவறாகப் பயன்படுத்தித்தான் சிலர் அவரை இந்த சர்ச்சைகளில் சிக்க வைத்துள்ளனர். ஒரு அதிகாரி ஒரு பெரிய டிசைன் பேப்பரை அவரிடம் காட்டி, அதை நம்ப வைத்துத்தான் கல் குவாரிகள்ல குப்பைகளை டம்ப் பண்ணலாம் என்கிற ஐடியாவை விஜி அண்ணனிடம் திட்டமிட்டுத் திணித்து வச்சிருக்காங்க. அதேபோல்தான் இந்த பெயிண்ட் விவகாரமும் நடந்துள்ளது என்று உண்மையை உடைத்துள்ளார்.

மேலும் பேசிய அவர், யார் மீது வேண்டுமானாலும் மிகச் சுலபமாகக் குற்றச்சாட்டுகளை ஏவி விட்டு ட்ரோல் செய்துவிடலாம். ஆனால் அந்த விஷயத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையான நோக்கத்தை நாம் பார்க்க வேண்டும். திருவெறும்பூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் குப்பை பிரச்சினைக்கு எப்படியாவது ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டும்தான் அவர் தொடர்ந்து உழைத்து வருகிறார். அப்படிப்பட்டவரை இந்த சர்ச்சை மற்றும் அரசியல் சூழ்ச்சிக்குள் திட்டமிட்டுச் சிக்க வைத்துள்ளனர். தயவுசெய்து யாரும் கட்டிடத்தின் வண்ணத்தையோ அல்லது அதிகாரி திணித்த அந்த ஐடியாவையோ பார்க்காதீர்கள், தொகுதி மக்களுக்காக உழைக்கும் அவரோட தூய்மையான எண்ணத்தைப் பாருங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுகவிலிருந்து தவெக-வுக்கு வந்த சீனியர் புள்ளியான எஸ்.ஆர்.சபரி, தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜிக்கு ஆதரவாகப் பேசியிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி மக்களின் நலனுக்காக மட்டுமே யோசிக்கும் ஒரு எதார்த்தமான மனிதரை, வண்ணத்தை வைத்தோ அல்லது திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட ஐடியாக்களை வைத்தோ அரசியல் சூழ்ச்சி செய்து வம்புக்கு இழுக்க வேண்டாம் என்கிற சபரியின் இந்த அதிரடிப் பேட்டி, திருவெறும்பூர் அரசியல் களத்தில் நிலவி வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Thiruverumbur #Thuvakudi #SRSabari #NavalpattuViji #TVK #TrichyPolitics #TamilNaduPolitics #PoliticalSupport #VijiMLA #TrendingTrichy #GarbageIssue

Socials: Handles: @trichyinsight @trichyinsight