TVK Trichy East Ticket Clash: Vijay Faces Caste Politics Issue | Trichy Insight
தமிழக வெற்றி கழகத்தில் திருச்சி கிழக்கு தொகுதிக்கான சீட் ஃபைட் தற்போதே சாதி அரசியலாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
June 4, 2026. தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சமத்துவ கொள்கை முழக்கம் இட்டாலும், கிரௌண்ட் லெவலில் நடக்கும் சீட் ஃபைட் தற்போதே சாதி அரசியலை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் யார் களம் இறங்குவது என்பதில் தற்போதே பெரிய அக்கப்போர் வெடித்துள்ளது. திருச்சி கிழக்கில் மண்ணின் மைந்தன் தான் களம் இறக்கப்படுவார் என்று தலைமை அறிவித்ததில் இருந்தே, உள்ளூர் சீனியர் தலைவர்கள் தங்களுக்குள் காய் நகர்த்த தொடங்கிவிட்டனர்.
இதில் முதல் ஆளாக முத்தரையர் சமூகத்துக்கு தவெக அமைச்சரவையில் அல்லது முக்கியத்துவத்தில் போதிய இடம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தை முன்வைத்து, குப கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் சிரஞ்சீவி ஆகியோர் இந்த சீட்டுக்காக தற்போதே துண்டு போட்டு வைத்துள்ளனர். எப்படியாவது திருச்சி கிழக்கு தொகுதியை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிட வேண்டும் என்று அவர்கள் தரப்பு தீவிரமாக வேலை செய்து வருகிறது.
ஆனால் இந்த ரேஸில் ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக, சமீபத்தில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளே குதித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் மெஜாரிட்டியாக இருப்பது சோழியவெள்ளாளர் சமூகம் தான் என்றும், அதனால் தனக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வெல்லமண்டி நடராஜன் போட்டாபோட்டியில் இறங்கியுள்ளார். இதனால் திருச்சி தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
அடுத்த கட்டமாக, வெல்லமண்டி நடராஜன் தனது சாதி அமைப்புகளை களம் இறக்கி சமூக வலைதளங்களில் பிரஷர் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் சோழிய வெள்ளாளர் நலச் சங்கம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், "திருச்சி கிழக்கு சோழ வெள்ளாளர்களின் தொகுதி! இது எங்கள் உரிமை! எங்கள் தொகுதி!" என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முத்தரையர்களுக்கு மிகை பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் குப கிருஷ்ணனுக்கு சீட் கொடுத்தால் எக்காலத்துக்கும் வெள்ளாளர் ஓட்டு கிடையாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
தவெகவின் கவனத்திற்கு என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ள அந்த போஸ்டரில், சோழுவெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தவிட்டால் தவெகவுக்கு தங்களின் வாக்குகள் கிடையாது என்று ஓப்பனாகவே டீல் பேசியுள்ளனர். விஜய்யின் சமத்துவ கொள்கைக்கு சவால் விடும் வகையில் இந்த சாதி ரீதியிலான மிரட்டல் அரசியல் தற்போதே திருச்சியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த கோஷ்டி பூசலை விஜய் எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Socials: #TrichyInsight #TrichyNews #TVK #Vijay #TrichyEast #VellamandiNatarajan #KupaKrishnan #PoliticsNews #TamilNews #TrendingTrichy #CastePolitics #TamilNadu
@trichyinsight @trichyinsight