தவெக விஜய் ராஜினாமா? திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் - Trichy Insight
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்யப்போவதாகத் தகவல்; இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் மகேஷை முன்னிறுத்தி திமுக இப்போதே வியூகம்!
மே 7, 2026: தமிழக அரசியலில் இப்போது ஹாட் டாப்பிக் தவெக தலைவர் விஜய்யின் ராஜினாமா முடிவுதான். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் விஜய். பெரம்பூரில் 53,715 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கில் 27,416 வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் கெத்து காட்டினார். இருப்பினும், விதிகளின்படி ஏதாவது ஒரு தொகுதியை அவர் தக்கவைக்க வேண்டும் என்பதால், பெரம்பூரை வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
விஜய்யின் இந்த முடிவால் திருச்சி கிழக்கு தொகுதியில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதையடுத்து, இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுக இப்போதே களத்தில் குதித்துவிட்டது. கடந்த தேர்தலில் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆனால், வரப்போகும் இடைத்தேர்தலில் ஒரு வலுவான முகத்தை நிறுத்த திமுக மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் மகேஷை இந்தத் தொகுதியில் களமிறக்க ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
திருச்சி கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை இது திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டது. ஆனால், விஜய்யின் வருகை இந்தச் சமன்பாட்டையே மாற்றிப் போட்டுவிட்டது. இப்போது விஜய்யே ராஜினாமா செய்யும் சூழலில், அந்த இடத்தை தவெக தக்கவைக்குமா அல்லது திமுக மீண்டும் தட்டிச் செல்லுமா என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும் வரை காத்திருக்காமல், வேட்பாளர் தேர்வை இப்போதே முடித்துவிட்டு தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என அறிவாலயம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, திருச்சி மாவட்டத்தின் முக்கியப் புள்ளிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஆதரவுடன் இந்த முறை எப்படியும் வென்றாக வேண்டும் என்பதில் திமுக முனைப்பாக உள்ளது. மறுபுறம், விஜய் தன் சார்பில் யாரை திருச்சி கிழக்கில் நிறுத்துவார் என்பதும் சஸ்பென்ஸாகவே உள்ளது. மொத்தத்தில், திருச்சி கிழக்கு தொகுதி இப்போதே ஒரு மினி பொதுத்தேர்தல் களமாக மாறத் தொடங்கிவிட்டது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #VijayResignation #TVKVijay #TrichyEast #DMK #ByElection #TNPolitics2026 #ThalapathyVijay #TrichyPolitics #BreakingNews #TamilNadu
Socials: Handles: @trichyinsight @trichynews