Woman with Petrol Bottle at Trichy Collector Office | Trichy Insight

Woman with Petrol Bottle at Trichy Collector Office | Trichy Insight

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

30 ஜூன் 2026: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளிக்க வருவார்கள். அந்த வகையில் இன்று திருச்சி கலெக்டரேட்டில் பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்த போது திடீரென ஒரு பெரும் பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த சர்புனிசா என்ற 38 வயது பெண்மணி தந்து இரண்டு மகள்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வரும் பொதுமக்களை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தனர். அப்போது சர்புனிசாவின் பையை சோதனை செய்த போது அதற்குள் ஒரு பெட்ரோல் பாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடமிருந்த பெட்ரோல் பாட்டிலை உடனடியாகப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சர்புனிசா தனது வீட்டின் உரிமையாளருடன் வாடகை தொடர்பான பெரிய பிரச்சினையில் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சர்புனிசா கூறுகையில், தங்களது வீட்டின் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியே வீசியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போய்விட்டதாகவும் அவர் போலீசாரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் சுமார் 40 பேர் கொண்ட ஒரு பெரிய கும்பலுடன் வந்து தங்களையும் தங்களது மகள்களையும் கொடூரமாகத் தாக்கியதாக சர்புனிசா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த அராஜக சம்பவம் குறித்து ஏற்கனவே உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். காவல்துறையினரின் அலட்சியப் போக்கினாலும், தங்களுக்கு நீதி கிடைக்காததாலும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்திற்குப் பிறகு போலீசார் சர்புனிசாவிற்கு கடுமையான எச்சரிக்கைகளை வழங்கினர். தற்கொலை போன்ற முடிவுகள் சட்டப்படி குற்றம் என்பதை அறிவுறுத்திய போலீசார், பின்னர் அவரை முறைப்படி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுமதித்தனர். திருச்சியின் மையப்பகுதியில் உள்ள கலெக்டரேட் வளாகத்தில் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிரச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyCollectorate #SrirangamIssue #TrichyPolice #PublicGrievance #BreakingNewsTrichy #TrichyUpdates #LawAndOrder #LocalNewsTamilnadu

Socials: @trichyinsight @trichyinsight